’அ.தி.மு.க. போல் நம் கழகத்தின் தலைமைக்கும் சர்வாதிகாரம் வேண்டும்.’ ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, சில ஆண்டுகளுக்கு முன்பே தி.மு.க.வின் உட்கட்சி  நிகழ்வொன்றில் இப்படி வெளிப்படையாக உளக்கிடக்கையை வெளிப்படுத்தியவர் ஸ்டாலின். இப்போது ஜெயலலித மறைந்துவிட்ட நிலையில் அரசியலில் அவர் போட்ட தனி ராஜபாட்டையில் தானும் பயணிக்க ஆரம்பித்துவிட்டாரோ என்று ஒரு டவுட்டு!

ஜெயலலிதாவுக்கென்று தனி அரசியல் ஸ்டைல் இருந்தது. தேர்தலில் அ.தி.மு.க. தோற்கும் என்று முன்பே தெரிந்தாலும் கூட இறங்கிப்போய் கூட்டணிக்காக நிற்கமாட்டார். தி.மு.கவை தவிர வேறெந்த கட்சியையும் அ.தி.மு.க.வுக்கு எதிர் கட்சியாக நினைக்க மாட்டார்.

தன்னை எவ்வளவு விமர்சித்தாலும் கூட கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த் போன்றோரை தவிர மற்றவர்களுக்கு நேரடியாக தன் வாயாலோ, அறிக்கையாலோ பதில் தரமாட்டார். அப்படியே தந்திருந்தாலும் அப்படி நடந்தது  சொற்ப எண்ணிக்கையில்தான் இருக்கும். 

கட்சியில் தான் கொண்டு வர நினைக்கும் சில மாற்றங்களை, பத்திரிக்கைகளின் கவனத்துக்கு போகாமல் தனக்கு கீழிருக்கும் மாநில நிர்வாகிகளின் வாயிலாக கடைசி கிளை நிர்வாகி வரைக்கும் கொண்டு போவார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் கடும் வெள்ளம் வந்தபோது மக்கள் பிரச்னையை சுட்டிக்காட்டி நடிகர் கமல்ஹாசன் ஜெ., அரசை உரசியபோது பன்னீர்செல்வத்தை விட்டே பதிலடி கொடுத்தார் ஜெ., அதேபோல் சில கட்சி அரசியல் தலைவர்கள் தன்னை விமர்சித்தால் அந்த தலைவரின் சமூகத்தை சார்ந்த அ.தி.மு.க. நிர்வாகியை வைத்து பதிலடியை இறக்குவார். 

இதெல்லாம் அ.தி.மு.க.வில் மட்டுமில்லாமல் பொது வெளியிலும், அரசியல் அரங்கிலும் அவரை பற்றிய ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது. 

இப்போது ஸ்டாலினும் கிட்டத்தட்ட இந்த ஸ்டைலை ஃபாலோ செய்ய துவங்கிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகிகள். சர்வாதிகாரம் இருந்தால்தான் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த முடியும் என்று அன்றே விரும்பியவர், இன்று செயல்தலைவரான பின் ஜெயலலிதா போட்ட அரசியல் ராஜபாட்டையில் நடக்க துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

பா.ம.க. தரப்பிலிருந்து தி.மு.க. மீது சமீபத்தில் வந்த விமர்சனத்துக்கு வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவரான எம்.ஆர்.கே.வை வைத்து பதிலடி கொடுத்ததாகட்டும், காவிரி பிரச்னையில் தி.மு.க. துரோகம் செய்தது என்று வைகோ சீண்டியதற்கான பதிலறிக்கையில் அவரது பெயரையோ அல்லது அவரது கட்சியின் பெயரையோ குறிப்பிடாமல் ‘சில கட்சிகள், சில தலைவர்கள்’ என்று லந்தடித்ததாக இருக்கட்டும் இதெல்லாம் ஜெ., ஸ்டைல் என்கிறார்கள் ஸ்டாலினின் நெருக்கமான நிர்வாகிகள். 

சமீபத்தில் நடந்த கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கூட ‘தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று துரைமுருகனை வைத்து பேச வைத்ததும் ஜெ., ஸ்டைலின் பால பாடம்தான் என்கிறார்கள். 

இந்த மாதிரியான அதிரடி மாற்றங்கள் இனி கழகத்தில் நிறைய நடக்கும் என்றும் சொல்கிறது அறிவாலய மரத்து குயிலொன்று.

என்னவோ தளபதி இப்படியே போயி ஜெ., ஸ்டைல்ல ஆட்சிய பிடிச்சீங்கன்னா இந்த சர்வாதிகாரத்துக்கு ஒரு மரியாதை இருக்கும்!