திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து பேசிவிட்டு வந்த பிறகு அவருக்கு எதிரான அமைச்சர்களின் அலறல் அதிகமாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரை கடந்த சில வருடங்களாகவே திமுக ஊழல் புகார்களை கூறி வருகிறது. இது தொடர்பாக திமுக தரப்பில் இருந்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது திமுக சுமத்தும் முக்கிய ஊழல் குற்றச்சாட்டு டெண்டர்கள் தொடர்பானது தான். டெண்டர்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, 20 சதவீத கமிசன் கொடுப்பவர்களுக்கு மட்டுமே டெண்டர் செல்கிறது. அமைச்சர்கள், முதலமைச்சரின் உறவினர்கள் டெண்டர் எடுக்கிறார்கள்.

இப்படி கடந்த சில வருடங்களாக திமுக தரப்பு அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் எந்த அமைச்சரும் ஏன் முதலமைச்சர் கூட சீரியசாக எடுத்துக் கொண்டது இல்லை. ஆனால் தற்போது அதே ஊழல் குற்றச்சாட்டை திமுக தூசி தட்டு எடுத்துள்ளதுடன் அது தொடர்பான கோப்புகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து கொடுத்துவிட்டு வந்துள்ளது. அதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நேரடியாக சென்று ஆளுநரை சந்தித்து இந்த கோப்புகளை வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னர் நீதிமன்றம் சென்ற போது பொங்காத அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் தற்போது பொங்குகிறார்கள். அதிலும் திமுக அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை பட்டியலிட்ட நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தின் முன்புறம் கொளுத்தும் வெயிலில் நாற்பது நிமிடங்கள் நின்று கொண்டே பழைய திமுக அமைச்சர்கள் மீதான புகார்களை பட்டியிலிட்டார். முதலமைச்சர் மட்டும் அல்ல அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், பாண்டியராஜன் போன்றோரும் செல்லும் இடமெல்லாம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை பட்டியலிட்டனர்.

அத்தோடு அதிமுக அமைச்சர்கள் மீதான திமுகவின் புகார்கள் குறித்தும் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகின்றனர். இதற்கு முன்பு திமுகவின் ஊழல் புகாருக்கு இப்படி எதிர்வினையாற்றாத அதிமுக தற்போது கொதிக்கக் காரணம் ஆளுநர் தான் என்கிறார்கள். அண்மையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்க எதிராக தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இது பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விசாரணை ஆணையம் மூலமாக அண்ணா பல்கலைக்காக துணைவேந்தர் சூரப்பாவிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் என்று கூறி சில கோப்புகளை கொடுத்துள்ளார். அத்துடன் இப்படி எல்லாமா முறைகேடு நடக்கிறது என்று ஆளுநர் ஆச்சரியப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். மேலும் மு.க.ஸ்டாலின் மீது ஆளுநர் மிகவும் பாசமாக உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார். இதற்கு பின்னர் தான் திமுக மீது அமைச்சர்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளது.

அதாவது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை கமிசன் விவகாரத்தில் ஆளுநர் அதிமுக அரசு மீது கோபமாக உள்ளார். இந்த நிலையில் அதிமுக அரசின் முக்கிய அமைச்சர்கள் தொடர்பாக திமுக தரப்பு கொடுத்துள்ள புகார் அவருக்கு அல்வா துண்டு போல் சில வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது. அதாவது சூரப்பாவிற்கு எதிராக விசாரணை ஆணையம் அமைத்தது போல் அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்க ஆளுநருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. துணைவேந்தர் விவகாரத்தில் தனக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது அதிர்ச்சி வைத்தியம கொடுக்க ஆளுநர் யோசித்து வருவதாக சொல்கிறார்கள்.

இதனால் தான் எப்போதும் இல்லாத வகையில் தற்போது திமுகவின் ஊழல் புகாரால் அதிமுக டென்சன் ஆகியுள்ளது. அதாவது பாம்பின் கால் பாம்பறியும் என்று ஒரு பழ மொழி உண்டு. என்ன தான் ஆளுநர் வசம் அதிகாரம் இருந்தாலும் அதிமுக அமைச்சர்களின் மைனஸ் பாய்ன்ட்டுகளை கண்டறிவது சற்று சிரமம் தான். ஆனால் அதிமுக என்ன என்ன செய்யும் என்பது ஏற்கனவே இங்கு ஆட்சியில் இருந்த திமுகவிற்கு அத்துப்படி. அப்படித்தான் ஆளுநரை சந்தித்து மு.க.ஸ்டாலின் போட்டுக் கொடுக்க விஷயம் விவகாரமாகியுள்ளது.