தமிழ்நாட்டில் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் வர முடியாது. வேண்டுமென்றால் பாகிஸ்தான் போகட்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறியுள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் கடந்த 28-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களை நோக்கி குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பேரணி நடந்தது. அந்தப் பேரணி மற்றும் விளக்க கூட்டம் கன்னியாகுமரியில் நேற்று மாலை நடைபெற்றது. 

இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ்;- உச்சியில் காஷ்மீரும் பாதத்தில் கன்னியாகுமரியும் இருக்கிறது. யார் போராடினாலும் சிஏஏ நாட்டை விட்டு போகாது. பாகிஸ்தான், ஈரான், சிரியா,  துருக்கியில் அதிக முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனவே, இன்றும் நாளையும் எப்போதும் குடியுரிமை சட்டத்தால் துன்பம் இல்லை என சவால் விடுகிறோம் என்றார். 

மேலும், பேசிய அவர், மு.க.ஸ்டாலின் பொது அறிவு நூல்களைப் படிக்க வேண்டும். முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களுக்கு என்னென்ன துன்புறுத்தல்கள் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும், இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை என்ன என்பதையும் ஒப்பிட்டு மு.க.ஸ்டாலின் புத்தகங்களைப் படிக்க வேண்டும். பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதையெல்லாம் மு.க.ஸ்டாலின் அறிந்துகொள்ள வேண்டும். மு.க.ஸ்டாலினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அண்ணன் தம்பி போல பேசுகிறார்கள். மு.க.ஸ்டாலினால் இனி தமிழ்நாட்டில் ஒருபோதும் முதல்வராக வர முடியாது. வேண்டுமென்றால் பாகிஸ்தான் போகட்டும் என்று ஆவேசமாக முரளிதர் ராவ் கூறினார்.