நாடாளுமன்ற தேர்தலில் கமலை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து யோசிக்குமாறு ஸ்டாலினுக்கு டெல்லியில் இருந்து ராகுல் காந்தி தூது அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற உடன் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார் கே.எஸ்.அழகிரி. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது செயல் தலைவர்களான வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆனால் ராகுல் காந்தி நீண்ட நேரம் அழகிரியிடம் தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். 

பெரும்பாலும் தமிழகத்தின் அரசியல் சூழல், பிற கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு, காங்கிரசின் வாக்கு வங்கி, தி.மு.கவின் செயல்பாடு என ராகுல் விரிவாக கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். அழகிரியுடன் சேர்ந்து வசந்தகுமாரும் தமிழக அரசியல் நிலவரத்தை புட்டு புட்டு வைத்துள்ளனர். மேலும் தற்போதைய சூழலில் அ.தி.மு.க மீது அதிருப்தி உள்ளதாகவும், அதே சமயம் அண்மைக்காலமாக எடப்பாடியின் செயல்பாடுகள் சாமான்ய மக்களை கவர்ந்து வருவதையும் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலிடம் எடுத்துரைத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து கமல் குறித்த பேச்சு வந்துள்ளது. சில மாதக்ஙளுக்கு முன்னர் கமல் டெல்லி வந்து தன்னையும், சோனியாவையும் சந்தித்துவிட்டு சென்றது குறித்து ராகுல் கூறியுள்ளார். மேலும் கமல் போன்ற க்ளீன் இமேஜ் உள்ளவர்கள் நமது கூட்டணியில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று ராகுல் தெரிவித்துள்ளார். அதற்கு கமலுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி கிடையாது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இருந்தாலும் கமல் போன்றவர்கள் கூட்டணிக்கு வருவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ராகுல் தெரிவித்தாக கூறப்படுகிறது. 

மேலும் கமலை கூட்டணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு குறித்து ஸ்டாலினிடம் பேசுமாறு அழகிரியை ராகுல் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்தே சென்னை திரும்பிய அழகிரி உடனடியாக ஸ்டாலினை பார்க்க நேரம் கேட்டுள்ளார். ஸ்டாலின் நேரம் கொடுத்ததும் தனியாக சென்றால் யூகங்கள் எழும் என்பதால் செயல் தலைவர்களாக தேர்வானவர்களையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார் அழகிரி. அப்போது டெல்லியில் ராகுலுடன் நடைபெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்களை அழகிரி எடுத்துரைத்துள்ளார். 

மேலும் கமலை கூட்டணியில் சேர்ப்பதால் ஒரு க்ளீன் இமேஜ் நமக்கும் கிடைக்கும் ராகுல்ஜி’ கருதுகிறார் என்று அழகிரி ஸ்டாலினிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு வழக்கம் போல் அனைத்து விஷயங்களையும் ஆராயலாம், பொறுமையாக முடிவெடுக்கலாம் என்று மட்டும் ஸ்டாலின் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. கமல் தி.மு.கவிடம் கூட்டணி கதவுகளை தட்டிப் பார்த்து திறக்காத காரணத்தினால் டெல்லி மூலம் திறக்க முயற்சிப்பதாக தி.மு.க கருதுகிறது. மேலும் காங்கிரஸ் என்கிற ஒரு கட்சியுடன் கூட்டணி இருந்தால் போதும் நாடாளுமன்ற தேர்தலில் வென்றுவிடலாம் என்றும் தி.மு.க நம்புகிறது. 

கமல் போன்றோரை தூக்கி சுமப்பதால் தி.மு.கவிற்கு எந்த பலனும் இல்லை, மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை எதற்கு வளர்த்து விட வேண்டும் என்றும் தி.மு.க யோசிப்பதாக சொல்கிறார்கள். எனவே என்ன தான் ராகுல் வாய்ஸ் கொடுத்தாலும் கமலுக்கு தி.மு.க கூட்டணி திறக்கவே திறக்காது என்கிறார்கள். இந்த நிலையில் தான் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்த செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தி.மு.க கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து பேசியதாக வெளிப்படையாக பேட்டி அளித்தார்.