MK Stalin - journalists meeting

தூத்துக்குடி வன்முறை குறித்து அரசு அறிவித்த ஒரு நபர் கமிஷனே கண்துடைப்பு நாடகம் தான் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல் நாள் சட்டமன்ற கூட்டம் இன்று கூடியுள்ள் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை
அணிந்து வந்தனர். தமிமூன் அன்சாரி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களைக் கொண்ட சின்ன பேனரை கையில் பதாகை போல் தூக்கி வந்தார். சட்டமன்ற
வருகையே தடாலடியாக இருந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

தூத்துகுடி சம்பவம் தொடர்பான ஐந்து பக்க விவர அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்தனர் என்றும், அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கண்ணீர்புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் போராட்டக்காரர்களை கலைத்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில், துப்பாக்கிசூடு என்கிற வார்த்தை அறிக்கையில் இடம்பெறவே இல்லை. அதற்கு மாறாக, காவல்
துறையின் நடவடிக்கை எடுத்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மரணமடைந்தவர்கள் பற்றியோ, காயமடைந்தவர்கள் பற்றியோ எதுவும்
அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில், துப்பாக்கிசூடு என்ற வார்த்தை இடம் பெறாததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். இதன் பின்னர், சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவித்து வெளிநடப்பு செய்தது. அவர்களைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றும் வரை கூட்டத்தொடரை நிரந்தரமாக
புறக்கணிக்கப்போவதாக கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும். ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது
கண்துடைப்பு என்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில் துப்பாக்கிசூடு என்கிற வார்த்தையை பயன்படுத்தாது ஏன்? என்றும்
ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

துப்பாக்கிசூட்டால் படுகொலை நடந்திருக்கிறது என்று நான் கூறியதற்கு, படுகொலை என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இடம்பெறக் கூடாது என்று
முதலமைச்சர் கூறியதைத் தொடர்ந்து அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் அந்த வார்த்தையை நீக்கினார். தூத்துக்குடி படுகொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டு எந்த போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தாக வேண்டும். வழக்கு பதியப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக அமைச்சரவைக் கூட்டத்தை கூடி நிரந்தரமாக தீர்மானம் போட வேண்டும் என்ற நிலையில் நாங்கள் கூட்டத்தில்
பங்கேற்கப்போவதில்லை. அந்த நிலையில் நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியுள்ளோம். தூத்துக்குடி சம்பவம் குறித்து முறையாக எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் திமுக, நீதிமன்றத்தை நாடும் என்றும் குற்றவாளிகள் யார் என்பதை வெளியிடுவோம் என்றும் ஸ்டாலின் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், சட்டசபையில் உண்மையை மறைத்திருக்கிறார்கள். இது குற்றவியல் நடவடிக்கைதான். மகத்தான குற்றவியல் நடவடிக்கை இது என்று கூறினார்.