வந்ததில்  முக்காள் வாசி முதியவர்களே, கூட்டத்தை மொத்தமாக கூட்டிப் பார்த்தால் 300 பேர் கூட தேறவில்லை. வெறும்  காலிச் சேர்களால் நிரம்பி வழிந்த  ஆலோசனை  கூட்டத்தால்   மு.க.அழகிரி  செம்ம அப்செட் மூடில் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆதரவாளர்களை இப்போது சந்திப்பேன், அப்போது சந்திப்பேன் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த அழகிரி ஒரு வழியாக மதுரையில் நேற்று ஆதரவாளர்களை சந்தித்தார். சென்னையில் செப்டம்பர் 5ந் தேதி கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து நடைபெறும் அமைதி ஊர்வலத்தில் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று அழகிரி கடந்த 2 மூன்று நாட்களாகவே பயங்கரமாக பில்ட் அப் கொடுத்து வருகிறார்.

இதனால் மதுரையில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் வந்த குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை எதிர்பார்த்து மதுரையில் அழகிரி வீடு அமைந்திருக்கும் டி.வி.எஸ் நகர் பகுதியில் காலை முதலே பரபரப்பு காணப்பட்டது. மேலும் ஆதரவாளர்களை அழகிரி சந்திப்பதற்காக பிரமாண்ட சாமியான பந்தல் மற்றும் ஏராளமான சேர்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் ஒரு நொடி கூட இருக்க முடியாது உடனடியாக நீக்கப்படுவார்கள், எதிர்காலத்தில் எந்த சூழலிலும் அவர்களால் தி.மு.கவில் மீண்டும் இணைய முடியாது என்று மாவட்டச் செயலாளர்கள் மூலம் இரண்டு மூன்று நாட்களாகவே தி.மு.க மேலிடம் எச்சரித்து வந்தது. இதன் காரணமாக அழகிரி ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரையில் இருந்து தி.மு.கவின் ஒரு வார்டு பிரதிநிதி கூட பங்கேற்கவில்லை. 



மேலும் மன்னனும், கோபியும் தங்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சிலர் மூலமாக ஒரு 200 அல்லது 300 பேரை அங்கு அழைத்து வந்திருந்தனர். அவர்களும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர். மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் அதிகம் காணப்பட்டனர். சில வயதான பெண்களையும் அங்கு பார்க்க முடிந்தது. தி.மு.க கரை வேட்டியில் சிலர் இருந்தனர். ஆனால் அவர்கள் தி.மு.கவினரா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டத்திற்கு அழகிரி வந்தார்.

அப்போது கலைஞருக்கு மரியாதை செலுத்தும்விதமாக நாம் அனைவரும் செப்டம்பர் 5ந் தேதி சென்னையில் திரள வேண்டும் என்று அழகிரி கேட்டுக் கொண்டார். தி.மு.க என்கிற வார்த்தையையோ, ஸ்டாலின் என்ற பெயரையோ மருந்துக்கு கூட அழகிரி உபயோகிக்கவில்லை. கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினல் சுமார் 1 மணி நேரத்திலேயே கூட்டம் முடிந்துவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம் புதிய கட்சி துவங்குவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.