தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனால் அரசியல் களம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றாலும், திமுக போன்ற கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.

தமிழக அரசியல் குறித்த பல்வேறு தகவல்கள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் மு.க அழகிரி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் மீண்டும் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதனிடையே அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என்ற போஸ்டர்களும் மதுரையில் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தனது பங்கு இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பா.ஜ.க.,வில் இணைவதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி. புதிய கட்சி தொடங்குவது குறித்து போகப் போகத் தான் தெரியும். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின் தான் எந்த முடிவையும் எடுப்பேன். வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்”என்று தெரிவித்தார். ஆனாலும் வந்தா மல... போனா ___ என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம் அழகிரி. அதாவது இதுதான் திமுகவிடம் கேட்பதற்கான கடைசி வாய்ப்பு. இப்போதும் மு.க.ஸ்டாலின் இணைத்துக் கொள்ள முன் வராவிட்டால் போனால் போகட்டும். அடுத்து தன் முடிவை பகிரங்கமாக அறிவிப்பேன் என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறார் மு.க.அழகிரி. ஒருவேளை நல்ல தகவல் இல்லை என்றால் அவர் பாஜகவில் இணைந்து ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் முடிவுக்கு வந்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ( அழகிரி என்றாலே அதிரடி அரசியல் தானே..)

பா.ஜ.க தலைமையோடு நல்லத் தொடர்பில் இருக்கிற, மு.க.அழகிரி, தி.மு.க.,வுக்கு எதிரான வேலைகளில், தன்னை கூர்மைபடுத்திக் கொண்டு வருகிறார். பாஜக தலைவர்கள் அவருக்கு அழைப்பு விடுப்பதை உள்ளூர ரசிக்கிறார். தமிழகம் முழுவதும் தி.மு.க., நண்பர்கள் மூலமாக கட்சியில் அதிருப்தியில்  இருப்பவர்களின் விவரங்களை தொடர்ந்து கேட்டு வாங்குகிறார். அவர்கள் ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து, ‛நான் சொல்லும்போது, என் பின்னால் அணிவகுத்தால், சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது’என அன்புத் தூண்டில் போட்டு வருகிறாராம். ரஜினிகாந்தில் அரசியல் பிரவேச அறிவிப்பு நெகட்டிவாக இருந்தால் மு.க.அழகிரி, பா.ஜ.க.,வில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.