திமுகவில் இணைத்துக் கொள்ள்வில்லை என்றால் புதிய கட்சி துவங்கும் எண்ணத்தில் உள்ள மு.க.அழகிரி, தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ள தனது முன்னாள் ஆதரவாளர்களை அவர்கள் வீடுகளுக்கு வழியச் சென்று சந்திக்கும் பயணத்தை தொடங்கி இருப்பதால் மு.க.ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சியாகி வருகிறது. 

முன்னதாக தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான அக்னிராஜ் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் அறிக்கை மட்டுமே தெரிவித்து இருந்தார். ஆனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, அக்னிராஜின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

அதேபோல் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபியின் சகோதரர் மருது மாரடைப்பால் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். இதற்கும் மு.க.ஸ்டாலின் தரப்பிலும், கட்சி சார்பிலும் துக்கம் விசாரிக்கவில்லை. ஆனால் எஸ்.ஆர்.கோபி வீட்டிற்கே மு.க.அழகிரி சென்று ஆறுதல் கூறினார். மேலும் அடுத்தடுத்து மு.க.அழகிரி திமுக நிர்வாகிகளின் இல்லங்களுக்கு சென்று திமுகவினரை திணறடிக்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

’’எஸ்.ஆர். கோபி வீட்டிற்கு அழகிரி சென்றதில் பல அரசியல் கணக்கு உள்ளது. முதலில், கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் இன்னும் பலர் அழகிரியின் தொடர்பில் உள்ளனர் என நிரூபணமாகியுள்ளது. கோபி தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்கிறார். அழகிரி சந்திப்பால் அவர் மீதான கட்சி நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது இனிமேல் தெரியும். அவர்கள் போன்றோர் வேறு வழியின்றி அழகிரி பக்கம் வந்தாக வேண்டும். முக்கிய நிர்வாகிகள் வெளியேறினால் கட்சி பலவீனமாகிவிடும். தி.மு.க., நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாக ஸ்டாலினுக்கு உணர்த்தியுள்ளார். இனி தி.மு.க.,விற்கு மேலும் பல நெருக்கடிகளை கொடுப்பார்’’என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.