தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 138 நகராட்சிகளில் திமுக132 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. பேரூராட்சியிலும் திமுகவே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது போல மதுரை மாநகராட்சியையும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

திமுக பெருவாரியான வார்டுகளில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனாலும், ஒரே ஒரு தொகுதியில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பெற்ற தோல்வி திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சரும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தேர்தலில் நேரடியாக ஆதரவாளர்களை களமிறக்காத நிலையில் சுமார் 40-பேர் அவரது ஆதரவுடன் சுயேச்சைகள் போட்டி விட்டதாக கூறப்படுகிறது.

அவரது தீவிர ஆதரவாளர்களுள் ஒருவராக அறியப்பட்டவர்தான் முபாரக் மந்திரி. இவர் தான் வசிக்கும் 42ஆவது வார்டில் திமுக சார்பாகப் போட்டியிட கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் தர மறுத்து, அந்த வார்டை கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடுசெய்திருந்தனர்.இந்நிலையில் சுயேச்சையாகத் தனது மனைவி பானுவை முபாரக் மந்திரி களமிறக்கினார். 

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பானு நான்காயிரத்து 461 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு அடுத்தபடியாக பாஜக இரண்டாயிரத்து 291 வாக்குகளைப் பிடித்ததுடன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது. இச்சம்பவம் திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.