தனிக்கட்சி துவங்கும் திட்டம் தனக்கு இல்லை என்பதை மு.க.அழகிரி சூசமாக தெரிவித்துவிட்ட நிலையில் அவரது திட்டம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மதுரையில் மு.க.அழகிரிதனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு கலைஞர் மறைந்த 30வது நாளில் மு.க.அழகிரி சென்னையில் தனது ஆதரவாளர்களின் பேரணிக்கு ஏற்பாடு செய்தார். திமுக மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடக்கூடாது என்கிற திட்டத்தின் அடிப்படையில் அழகிரி இந்த பேரணியை நடத்தினார். சுமார் ஒரு லட்சம் பேரை திரட்டி திமுகவின் முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பது தான்அ ழகிரியின் திட்டமாக இருந்தது. ஆனால் அழகிரியின் அந்த பேரணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று அழகிரி கூறிய நிலையில் 10ஆயிரம் பேர் கூட வரவில்லை. இதன் பிறகு அழகிரி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். திமுக முழுவதுமாக மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் மு.க.அழகிரி மறுபடியும் அரசியல் களத்திற்கு வருகை தந்துள்ளார். இந்த முறை மதுரையில் தனது ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் போட்டிருந்தார் அழகிரி. பெருமளவில் ஆதரவாளர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கை இல்லாமல் தான் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அழகிரி செய்திருந்தார்.

ஆனால் அழகிரியே எதிர்பார்க்காத அளவிற்கு மதுரையில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். மதுரை மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமனோர் மதுரைக்கு வந்திருந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அதிருப்தியில் உள்ள திமுகவினரையும் மதுரை கூட்டத்தில் பார்க்க முடிந்தது. இவர்கள் பெரும்பாலும் அண்மைக்காலத்தில் பதவியை இழந்தவர்கள் மற்றும் திமுகவில் புதியவர்கள் வருகையால் வாய்ப்புகளை இழந்தவர்கள் என்று கூறப்படுகிறது. திமுகவில் பல வருடங்களாக இருந்தும் எவ்வித பதவியும் கிடைக்காதவர்களும் அழகிரி கூட்டத்தில் பங்கேற்றனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது வெறும் அழகிரி ஆதரவாளர்கள் கூட்டம் என்று சொல்லாமல் திமுக அதிருப்தியாளர்கள் கூட்டம் என்றும் சொல்லலாம். தனது கூட்டத்திற்கு வந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கையை பார்த்து அழகிரி திக்குமுக்காடிப்போனார் என்றே சொல்லலாம். 2018ம் ஆண்டு சென்னையில் தான் நடத்திய பேரணிக்கு கூட்டம் சேராதது அழகிரியை மிகவும் அப்செட்டாக்கியது- இதனால் தான் அரசியல் களத்தில் இருந்து அவர் வெளியேறினார். ஆனால் இப்போது கூடிய கூட்டம் அழகிரிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தன்னை திமுகவில் இருந்து நீக்கிய மு.க.ஸ்டாலினை பழிவாங்க இது சரியான தரும் என்கிற முடிவிற்கு அழகிரி வந்துள்ளார். இதனால் தான் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய போது ஸ்டாலினால் ஒரு போதும் முதலமைச்சராக முடியாது, அவரை முதலமைச்சராக விடாமல் தனது ஆதரவாளர்கள் தடுப்பார்கள் என்றும் அழகிரி பேசியுள்ளார். பெரும்பாலும் அழகிரி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்கிற நம்பிக்கையில் தான் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் மதுரை கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் அதற்கான அறிவிப்பை அழகிரி வெளியிடவில்லை. அதே சமயம் தான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் நீங்கள் எற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் அரசியல் கட்சி துவங்குவது தொடர்பாக இதுவரை பாசிடிவாக அழகிரி எதுவும் பேசவில்லை. அதே போல் கட்சி துவங்கும் விவகாரத்தில் தான் எதிர்மறையான முடிவை எடுத்தாலும் கூட தொண்டர்கள் ஏற்க வேண்டும் என்று அழகிரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியல் கட்சி துவங்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதே சமயம் சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அழகிரி முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். இது தான் அழகிரியின் 2021 தேர்தல் பங்களிப்பு என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு எல்லாம் சென்று போட்டி பிரச்சாரம் செய்வது, மேலும் ஒரு அண்ணணாக மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை தான் செய்த நல்ல காரியங்கள் ஆனால் பதிலுக்கு ஸ்டாலின் செய்த விஷயங்களை பட்டியலிட்டு சென்டிமெண்டாக ஸ்டாலினின் இமேஜை டேமேஜ் ஆக்குவது என அழகிரி முடிவு செய்து வைத்திருப்பதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.