முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மு.க.அழகிரி, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து விலகி தன் குடும்பத்தினருடன் மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த வாரத்தில் மு.க.அழகிரியின் மனைவி மற்றும் மருமகள் என குடும்பத்தினர் அனைவரும் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் மு.க.அழகிரிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

 
 
இதனையடுத்து மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மு.க.அழகிரியின் இல்லத்திற்கே சென்ற மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதனால் அவருக்கு லேசான தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று கூறிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. 

குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளதால் தன்னுடைய பேரன் இதயநிதி வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.  மு.க.அழகிரியின் உடல்நலம் குறித்து தகவலறிந்த அவரது ஆதரவாளர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.