பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுடன் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி திடீரென சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம் வருகிற 15-ம் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்குமாறு முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு எச்.ராஜா அழைப்பிதழ் வழங்கி வருகிறார். மு.க.அழகிரிக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று காரைக்குடியில் உள்ள எச்.ராஜா இல்லத்துக்கு திடீரென வருகை தந்தார். பின்னர், தனியறையில் இருவரும் ரகசிய சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க அழகிரி இந்த வாரத்தில் எச்.ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. என்னால் அந்த திருமணத்திற்கு வர இயலாது என்பதால் முன்கூட்டியே வந்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார். அப்போது செய்தியாளர்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நான் திமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் ஆளை விடுங்கப்பா எனக் கூறிக்கொண்டே அவசர அவசர காரில் ஏறிச் சென்றார்.