மதுரையில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்  மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். திமுகவின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி, 2014 ஆம் ஆண்டில், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். திமுக தலைவர் மு.கருணாநிதி உயிரோடு இருந்தவரை மு.க.அழகிரி கட்சியில் சேர்க்கப்படவில்லை. மு.கருணாநிதி மறைந்து சில நாட்களுக்குப் பிறகு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்த வந்த அழகிரி, கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தன்னுடன்தான் இருப்பதாக தெரிவித்தார்.

 

தொடர்ந்து, தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால், கட்சியில் தலைமையிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கருணாநிதி நினைவிடத்தை நோக்கி ஊர்வலம் ஒன்றை நடத்தினார். இந்த ஊர்வலத்தில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என மு.க.அழகிரி கூறியிருந்த நிலையில், அதற்கும் மிக குறைவானவர்களே ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கட்சியில் சேர்க்கப்பட்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுத்தானே ஆகவேண்டும் என்றும் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை, மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். தனது ஆதரவாளர்களுடன் சென்ற மு.க.அழகிரியை, அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.  கடந்த 30 ஆம் தேதி அன்று அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் காலமனார். அமைச்சர் வீட்டுக்கு சென்ற மு.க.அழகிரி, செல்லூர் ராஜூ தாயாரின் உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

 பின்னர், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அழகிரி ஆறுதல் கூறினார். அவர்களது சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றன. அமைச்சர் செல்லூர் ராஜூ - மு.க.அழகிரி சந்திப்பு நடைபெறும் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் காலமானதற்கு,  இரங்கல் தெரிவித்ததாகவும், நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன்  புறப்பட்டு சென்று விட்டார்.