வரும் சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து வருகிற 3-ந் தேதி ஆதரவாளர்களுடன்ஆலோசனை நடத்த உள்ளதாக மு.க அழகிரி தெரிவித்துள்ளார் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார்.  

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எந்தக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதற்கான ஆலோசனைகள் மற்றும் காய்நகர்த்தல்களிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம் போல திமுக-அதிமுக இடையே போட்டி ஏற்படும் என எதிர்பார் க்கப்பட்டு வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தை மேலும் வெப்பமடையச் செய்துள்ளது. 

இந்நிலையில் திமுகவின் தென்மண்டல பொறுப்பாளராக இருந்து பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க அழகிரியும் நீண்ட மௌனத்திற்குப் பின்னர்  வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள் என காத்திருந்த நிலையில், இதுவரை அவருக்கு திமுகவில் இருந்து அழைப்பு ஏதும் இல்லாததால் அவர் கட்சி துவங்க முடிவு செய்துள்ளதாகவும், அல்லது அவர் ரஜினியுடன் இணைந்து செயல்படபோகிறார் எனவும்  பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரும் இதுகுறித்து வாய்த்திறக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று வெளிப்படையாகவே கட்சி தொடங்குவது குறித்தான தகவலை அவர் வெளியிட்டுள்ளார். 

இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது:  வரும் சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து வருகிற 3-ந் தேதி ஆதரவாளர்களுடன்ஆலோசனை நடத்த உள்ளேன். ஆதரவாளர்கள் கூறும் கருத்துக்களை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயம் தொடங்குவேன். ரஜினியை விரைவில் கண்டிப்பாக சந்தித்து பேசுவேன். தி.மு.க.வில் மீண்டும் சேரும்படி இதுவரை எனக்கு எந்த அழைப்பும் இல்லை. தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.