’எனக்கு இரண்டு கண்கள் போனாலும் கவலையில்லை; எதிரிக்கு ஒற்றை கண்ணாவது போக வேண்டும்’என்கிற மனநிலையில் மு.க அழகிரி இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 

அண்மையில் மதுரையில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில், ‘எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலின் முதல்வராக விடமாட்டேன்’என அவர் முழங்கியது இந்த மனநிலையின் பிரதிபலிப்புதான் எனக்கூறுகிறார்கள். கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவர் பதவியை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஸ்டாலின், போட்டியை தவிர்க்க ’கிச்சன் கேபினட்’ஆலோசனைப்படி சொந்த சகோதரரான அழகிரியை அடியோடு ஓரம்கட்டினார். சகோதரி செல்வி உள்ளிட்ட உறவு வட்டம் எடுத்த சமாதான முயற்சிகளை ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கோபத்தின் உச்சிக்குப் போன அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆவேசம் காட்டினார். இதன் தொடர்ச்சியாக ஸ்டாலினை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யேக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் திமுகவில் ஒதுங்கியிருப்பவர்களையும், ஸ்டாலினால் ஓரம்கட்டப்பட்டவர்களையும் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர். முக்கிய புள்ளிகள் என்றால் அழகிரியே போனில் பேசுகிறாராம். இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது, ’அதிரடி மனிதராக சித்தரிக்கப்பட்ட அழகிரி இயல்பில் மென்மையானவர். தன்னை நம்பியவர்களுக்காக எதையும் செய்வார். திமுக ஆட்சியின்போது அழகிரியால் எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பல பேர் உண்டு. இவர்களெல்லாம் இன்றைக்கு அவரை மறந்துவிட்டார்கள். ஆனால் இது பற்றியெல்லாம் அவர் கொஞ்சமும் கவலைப்படமாட்டார்.

 

உடன்பிறந்த சகோதரனே இப்படி துரோகம் செய்யும்போது மற்றவர்களின் துரோகங்கள் என்னை பாதிப்பதில்லை என்றுதான் மு.க.அழகிரி சொல்வார்.
திமுகவிருந்து ஓரம்கட்டப்பட்ட இந்த காலக்கட்டத்தில் பல்வேறு இயக்கங்களிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால், அவற்றையெல்லாம் அழகிரி நிராகரித்துவிட்டார். கௌரவமான பொறுப்பு தரப்படும் பட்சத்தில் திமுகவிலேயே இருக்கவும் அவர் முடிவு செய்திருந்தார். இதற்காகத்தான் இவ்வளவு நாட்களும் அமைதியாக இருந்தார். ஆனால் அழகிரியின் பொறுமையை ஸ்டாலின் பலவீனமாக கருதி அவரை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தற்போது அழகிரி தீர்க்கமான முடிவோடு களத்தில் இறங்கியிருக்கிறார்.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, சமீபத்திய பீகார் தேர்தல் வரை முடிவுகளை அலசிப் பார்த்தால் ஒரு உண்மை தெரியவரும். ஏறத்தாழ 30 சதவீத தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி கிடைத்திருக்கிறது. இதுவே ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் ஒரு கட்சியிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் அழகிரிக்கு ஒருபோதும் கிடையாது. ஆனால் ஸ்டாலினுக்கோ இதை விட்டால் வேறு வாய்ப்பே இல்லை. இந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 முதல் 100 தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை நிறுத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். இவர்களால் வெற்றிபெற முடியவில்லை என்றாலும் கூட தொகுதிக்கு மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் திமுக வாக்குகளை பிரிப்பார்கள். இதன்மூலம் ஸ்டாலினின் முதல்வர் கனவு, கனவாகவே போகும். இது நிச்சயம் நடக்கும்’’என அந்த வட்டாரங்கள் கூறின.அழகிரியின் இந்த அதிரடி திட்டம் பற்றி அரசல்புரசலாக கேள்விப்பட்ட திமுக நிர்வாகிகள் கதிகலங்கிப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது