மலேசியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தும் முகாமில் தங்கியிருந்தபோது உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 25லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 12-ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னைக்கு வருகை தந்த முஹம்மது ஷரிப் (61) என்பவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அரசின் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக இத்தகவலை மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இச்செய்தி எனக்கு கிடைக்கப் பெற்றதும் உடனடியாக மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ஜெயக்குமார் அவர்களை தொடர்புகொண்டு ஆம்புலென்ஸ்சை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்ப கேட்டுக்கொண்டேன். அமைச்சர் அவர்களும் உடனடியாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS அவர்களை தொடர்பு கொண்டு உடனடியாக ஆம்புலென்ஸ் அனுப்பிவைக்க உத்தரவிட்டார். ஆனால் ஆம்புலென்ஸ் செல்வதற்கு முன்பாகவே அவர் இறந்து போனது துரதிர்ஷ்டவசமானது. இத்தகவல் அறிந்ததும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் அந்த இடத்திற்கு சென்று, பதற்றத்தில் இருந்தவர்களை அமைதிப்படுத்தினர். 

வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு வந்து அரசின் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கி இருந்து, விரைவில் தனது குடும்பத்தை சந்திப்போம் என்று நம்பிக்கையோடு இருந்த அவரது மரணம், அந்த முகாமில் தங்கி இருக்கக்கூடிய பலரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.ஆம்புலென்ஸ் வருகையில் தாமதம், மருத்துவர்கள் அங்கு இல்லாததுமே இந்த மரணம் ஏற்பட காரணம் என அங்கு தங்கியிருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு பரிசீலித்து அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு 25-லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். என அதில்  கூறப்பட்டுள்ளது.