மக்கள் நலனில் கவனம் செலுத்தாவிட்டால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று மாலை திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்;- மத்திய அரசு மமதையில் இருக்கிறது. மாநில அரசு எதற்கும் உதவாத அரசாக இருக்கிறது. இதில், இருந்து மக்களை திசை திருப்பவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தார்கள். இப்போது  மிசாவில் இருந்தாரா மு.க.ஸ்டாலின் என்று கேள்வி எழுப்புகிறார்கள். மிசாவில் சிறையில் இருந்து கடுமையான துயரங்களை அனுபவித்தபோது கூட தாங்கிக் கொண்டேன். ஆனால், தற்போது கேடு கெட்ட ஜென்மங்கள் அதனை சொல்லி விமர்சிப்பதால்   வேதனைப்படுகிறேன்.   

நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை. மக்கள் நலனுக்காக சிறை சென்றேன். தியாகம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு என்னைப்பற்றி பேச தகுதி இல்லை. தமிழகத்தில் பொய் சொன்னது போதாது என்று லண்டன், அமெரிக்கா சென்று பொய் சொல்கிறார்கள். தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது போல என்னை விமர்சித்து வருகிறார்கள். காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள் என்றார். 

மேலும், தமிழ்நாட்டை நம்பி தொழில் முதலீடு செய்ய வந்தாலும் இவர்கள் கேட்கும் கமிஷனை பார்த்து மயங்கி விழுந்து விடுகிறார்கள். இது, எடப்பாடி தலைமையில் 30 கொள்ளையர்கள் சேர்ந்து நடத்தும் கார்ப்பரேட் கிரிமினல் கொள்ளை ஆட்சி.  எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த 3150 கோடி ரூபாய் ஊழல் குறித்து திமுக சார்பில் நீதிகேட்டு வழக்கு தொடர்ந்தோம். அதற்கு தடை உத்தரவு பெற்றவர் இதுவரை ஒரு விளக்கமும் தரவில்லை என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.