நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை சிறு சறுக்கலை சந்தித்தது போல இந்திய கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சிறு சறுக்கலை சந்தித்துவிட்டதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு  தகுதி பெற்றது. லீக் போட்டிகளை எல்லாம் துவம்சம் செய்து விளையாடிய இந்திய அணி நாக் அவுட் போட்டியில் காலி ஆகிவிட்டது. இந்தியாவின் தோல்வியை அடுத்து பிரபலங்கள் அது குறித்து கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியையும் இந்திய அணியின் தோல்வியையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.


“ நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து சிறு சறுக்கலை சந்தித்தது. அதுபோல இந்திய கிரிக்கெட் அணியும் சிறு சறுக்கலை சந்தித்தது. அரசியலிலும் சரி, கிரிக்கெட்டிலும் சரி வெற்றி தோல்வி சகஜம். எதிர்காலத்தில் அதிமுகவும் வெற்றி பெறும். இந்திய கிரிக்கெட் அணியும் வெற்றி பெறும். அரையிறுதிப் போட்டியில் நான் பேட்டிங் செய்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்” என்று ஜெயக்குமார் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.