இதனால் வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரின் கவனமும் அழகிரியின் மீதே இருந்தது. பின்னர் அங்கிருந்து எழுந்து காரை நோக்கி நடந்த அழகிரியை அமைச்சர் தங்கம் தென்னரசு, பவ்வியமாக சென்று வழியனுப்பி வைத்தார், அழகிரியை எதிரில் தங்கம்தென்னரசு கையை கட்டி நின்றதைப் பார்த்து அழகிரி அவரிடம் ஏதோ சொல்லி தோளில் தட்டிக் கொடுத்தார்.
முன்னாள் அமைச்சரும் திமுக தென்மண்டல முன்னாள் அமைப்பாளருமான முக அழகிரியை கண்டதும் திமுக அமைச்சர்கள் ஓடி வந்து பணிவு காட்டினர். சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள மு.க அழகிரி வந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திமுக என்றால் வடக்கே ஸ்டாலின், தெற்கே அஞ்சாநெஞ்சன் அழகிரி என்ற நிலை கலைஞர் காலத்தில் இருந்துவந்தது. எதையும் வெட்டி வா என்றால் கட்டி வரும் ஆற்றலாளர் அழகிரி ஆவார். அதை அவர் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். எதையும் பேசுவதைக் காட்டிலும் செயலால் சாதித்துக் காட்டுவது அழகிரியின் தனி ஸ்டைல். திமுக ஆட்சியில் நடந்த இடைத் தேர்தலின்போது அவர் கையாண்ட தேர்தல் வியூகம் நாடு முழுவதும் திருமங்கலம் பார்முலா என பரபரக்கும் அளவிற்கு பிரபலமானது. அந்த அளவுக்கு எதையும் மாஸாக செய்யக் கூடியவர் அழகிரி. ஆனால் அவரின் பெயரை பயன்படுத்தி அவரின் ஆதரவாளர்கள் செய்த அட்ராசிட்டி ஒருகட்டத்தில் அழகிரியின் மீதான நன்மதிப்பை குறைத்தது.

தென்மாவட்ட மக்களுக்கு அழகிரி மீது இனம்புரியாத வெறுப்பு ஏற்பட அவரின் சில நடவடிக்கைகள் காரணமாக அமைந்தது. சிறிய நிகழ்ச்சி என்றாலும் கிடா வெட்டு, பிரியாணி விருந்து, சாலையை மறைக்கும் அளவிற்கு கட்டவுட் கலாச்சாரம் என அழகிரி ஆதரவாளர்கள் செய்த அட்ராசிட்டு அவரின் பெயரை மொத்தமாக டேமேஜ் செய்தது. அதே நேரத்தில் ஒரு சில அரசியல் காரணங்களுக்காக திமுக தலைவர் கருணாநிதி அழகிரியின் பதவிகளை அதிரடியாக பறித்தார். பின்னர் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் நிலவிய அதிகாரப் போட்டிதான் இதற்கு காரணம் என்றும் அழகிரி குற்றம் சாட்டினார். பின்னர் பலமுறை தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனஅவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை.
கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் அழகிரி கட்சியில் இணைவது கானல் நீராகவே மாறிப்போனது, ஒட்டுமொத்த திமுகவுக்கும் தலைவரானார் ஸ்டாலின். பிறகு ஸ்டாலினுக்கு எதிராக தனது அஸ்திரத்தை வீசத் தொடங்கினார் அழகிரி. அந்த அஸ்திரங்கள் அனைத்தும் புஸ்வானமாகப் போனது. ஒருவழியாக திமுக தலைவரானது மட்டுமின்றி தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்ற தனக்குள்ள செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டார் ஸ்டாலின். ஒரு கட்டத்தில் அழகிரியும் ஸ்டாலின் முதலமைச்சரானவுடன் தனது வாழ்த்தை பதிவு செய்து, என் தம்பி ஸ்டாலின் முதல்வரானதில் பெருமை கொள்கிறேன் என மனம் திறந்து பாராட்டினார். அன்று முதல் ஸ்டாலினுடனான மோதல் போக்கைகைவிட்டு சுகமாக இருந்து வருகிறார்.

ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். ஸ்டாலினும் பல மேடைகளில் என் அண்ணன் அழகிரி என அடிக்கடி அவரின் பெயரை உச்சரித்து வருகிறார். ஒருவகையில் அண்ணன் தம்பி உறவு சுமுகமாக இருந்து வருவதையே இது காட்டுகிறது. இந்நிலையில்தான் சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் அழகிரி இன்று கலந்து கொண்டார். விழாவுக்கு வந்த அழகிரியை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவடி நாசர் உள்ளிட்ட அமைச்சர்கள் பவ்யமாக வரவேற்றனர். மணமக்களை வாழ்த்தி விட்டு சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்திருந்தார் அழகிரி. அப்போது அங்கிருந்த திமுகவினர் அவருக்கு வளைத்து வளைத்து வணக்கம் போட்டனர். அங்கிருந்த ஏராளமானோர் அவருடன்செல்பி எடுத்துக்கொள்ள போட்டி போட்டனர்.

இதனால் வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரின் கவனமும் அழகிரியின் மீதே இருந்தது. பின்னர் அங்கிருந்து எழுந்து காரை நோக்கி நடந்த அழகிரியை அமைச்சர் தங்கம் தென்னரசு, பவ்வியமாக சென்று வழியனுப்பி வைத்தார், அழகிரியை எதிரில் தங்கம்தென்னரசு கையை கட்டி நின்றதைப் பார்த்து அழகிரி அவரிடம் ஏதோ சொல்லி தோளில் தட்டிக் கொடுத்தார். அப்போது அங்கு வந்த இன்னும் சில அமைச்சர்கள் அழகிரியை பார்த்தவுடன் கை கட்டி பணிவுடன் நின்றனர். பின்னர் அமைச்சர் நாசர் அழகிரிக்கு பவ்யமாக கும்பிடு போட்டார், பின்னர் அழகிரி அவரிடம் ஏதோ சொல்லி சிரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். அழகிரி வந்து செல்லும் வரை ஒட்டுமொத்த திமுகவினரின் பார்வையும் அவரின் மீதே இருந்தது குறிப்பிடத்தக்கது.
