இந்த மண்ணில் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பிடிக்காத ஒரே பெயர் ‘விஜயபாஸ்கர்’ என்பதுதான். கரூரில் தனியாவர்த்தனம் செய்து கோலோச்சிக் கொண்டிருந்த தான் இன்று மாஜி எம்.எல்.ஏ.வாகி நிற்க, விஜயபாஸ்கரோ  போக்குவரத்து துறை அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள மட்டுமில்லை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விஜயபாஸ்கரை போட்டு வெளுத்தெடுத்து விமர்சிப்பார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் கரூர் வந்திருந்த தினகரனும் தன் பங்குக்கு அமைச்சரை விளாசித் தள்ளினார். ‘செந்தில்பாலாஜின் பின்னே ஒரு காலத்தில் மஞ்சள் பையை தூக்கியபடி அலைந்த விஜயபாஸ்கரெல்லாம் இன்று அமைச்சராக இருப்பது, காலம் செய்த கோலம்.’ என்று நக்கலடித்தார். இதில் வி.பா. செம்ம அப்செட். 

இதற்கு பதிலடி கொடுத்து பிரித்தெடுக்க சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்தது. கரூர் தளவாய்பாளையத்தில் நடந்த அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் பேசியவர், விளாசிவிட்டார் இப்படி...” சில வருடங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க.வில் பதவி சுகத்தை அனுபவித்த செந்தில்பாலாஜி இன்று வாழவைத்த கட்சிக்கே எதிரியாகிவிட்டார். தினகரனை உசுப்பேற்றி, உசுப்பேற்றி அதையும் இஒதையும் செய்ய வைத்து, பதினேலு எம்.எல்.ஏ.க்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். ஆர்.கே.நகரில் தினகரன் கோஷ்டி இருபது ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து ஏமாற்றியது போல, அரவக்குறிச்சியில் ஐம்பது ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாற்ற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் இந்த ஊர் மக்கள் இதற்கெல்லாம் மயங்கும் நபர்கள் இல்லை. தெளிவானவர்கள். 

இதற்கிடையில் நான் ஒரு தகவலை கேள்விப்பட்டேன். அதாவது, அரவக்குறிச்சியில் வாக்காளர் வீடுகளுக்கு இனாமாக குக்கர் கொடுப்பதற்காக செந்தில் பாலாஜி டீம் கணக்கெடுத்து வருவதாக கேள்விப்பட்டேன். தினகரன் கொடுப்பதெல்லாம் தரமற்ற இலவச பொருட்கள். அதை வாங்கிப் பயன்படுத்துவது ரிஸ்க், வெடிக்கும் தன்மையுடைய தரமற்ற குக்கர்கள் அவை. உயிர் முக்கியமா அல்லது தரமற்ற இலவச குக்கர் முக்கியமா? என்பதை பெண்கள் யோசிக்க வேண்டும்.” என்று நறுக்கென முடித்தார். 

இந்த தகவல் தினகரன் தலைமையிலான செந்தில்பாலாஜி அண்ட்கோவின் காதுகளுக்குப் போக, ”மக்களை மிரட்டும் தொனியில் பயம் காட்டி பேசிவருகிறார் அமைச்சர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.” என்று எதிர்ப்பாட்டு பாடிவருகின்றனர் காட்டமாக.