’நான் கோட்டைக்கு போனா அமைச்சர், ஹாஸ்பிடலுக்கு போனா டாக்டர்’ என்று  பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசி பந்தா காட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கியிருந்தாலும், உள்ளூர பயந்துதான் இருக்கிறார் என்கிறார்கள் அவரது உள்வட்டார நபர்கள். 
ஏன்?

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மண்ணான புதுக்கோட்டையில் சமீபத்தில் தன் கட்சி நிகழ்ச்சி நடத்தினார் தினகரன். மேடையில் மைக் பிடித்தவர் விஜயபாஸ்கரை ‘குட்கா டாக்டர்’ என்று பொளந்தார். பிறகு “வெளியிலதான் விஜயபாஸ்கர் வீராவேசம் பேசிட்டு இருக்கார், உள்ளுக்குள்ளே  நொதுக்கிடக்கிறார். ரெண்டு மாசமிருக்கும், நடைபயிற்சியில இருந்தேன். எதிர்ல வந்தார் விஜயபாஸ்கர். என் பக்கம் வந்து கும்பிடு போட்டுட்டு, எடப்பாடி பழனிசாமி தன்னைக் கைவிட்டுட்டதா கண் கலங்கினார்.” என்று கொளுத்திப்போட்டார் தினா. 

இந்த நாள் வரையில் தினகரனின் இந்த ஸ்டேட்மெண்டை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுக்கவேயில்லை. ஆக இதைவைத்தே இவர் அவரை சந்தித்தது உண்மைதான்!எனும் முடிவுக்கு வந்துவிட்டனர் அ.தி.மு.க.வினர். அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும் இப்படி தான் தினகரனுடன் நெருக்கத்தில் இருப்பதாய் நினைப்பது குறித்து கொஞ்சமும் வருந்தவில்லை விஜயபாஸ்கர். 

ஆனால் அதேநேரத்தில் மற்றொரு பயம்தான் அவரைப் போட்டு ஆட்டுகிறது. அது...ஏற்கனவே குட்கா உள்ளிட்ட விவகாரத்தில் தன் கழுத்தில் ரெய்டு பாம்பை சுற்றி இறுக்குகிறது மத்திய அரசு. இந்த சூழலில் அவர்களுக்கு ஆகவே ஆகாத தினகரனுடன் தான் சந்தித்ததையும், வணக்கம்போட்டு வருத்தம் தெரிவித்ததாகவும் தினகரனே பேசியிருப்பது டெல்லிக்கு கடும் கோபத்தை தன் மீது வரவைத்திருக்குமே என்றுதான் நடுங்குகிறார். 

தினகரனை சந்திக்கவேயில்லை என்று வெளிப்படையாக மறுக்கவுமில்லை விஜயபாஸ்கர். அதேவேளையில் இதை அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை. காரணம் டெல்லியின் கோபப்பார்வை சுடுகிறது. ஆக மொத்தத்தில் புதுக்கோட்டை மண்ணில் தினகரன் கொளுத்திப்போட்ட பட்டாசு டாக்டரை கன்னாபின்னாவென காயப்படுத்தியிருக்கிறது. 

விஜயபாஸ்கரின் இந்த வேதனையை நன்றாகவே புரிந்து கொண்டு சிரிக்கும் தினகரன் தரப்பு, ‘தினகரன் பொய் சொல்கிறார். அப்படி ஒரு சந்திப்பு நடக்கவேயில்லை’ என்று டெல்லிக்கு பயந்து அமைச்சர் ஒரு வேளை சொல்லுவாரென்றால், அந்த சந்திப்பு பற்றிய வீடியோவையே வெளியிடுவோம்! என்று ஒரு தகவலை பரப்பிவிட்டிருக்கிறதாம். இது அமைச்சர் கவனத்துக்கும் போயிருக்கிறது. 

தினகரன் நடைப்பயிற்சி செல்லும்போது சிறிது தூரம் தள்ளி அவரது பின்னால் சில நபர்கள் பாதுகாப்பாக நடப்பார்களாம். ஆனால் இப்படியான மெய்க்காப்பாளர்கள் இருப்பது மற்ற யாருக்கும் தெரியாது. தினகரனுக்கும் தங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்பது போல் தள்ளி நடக்கும் அவர்களின் கைகளில், டி சர்ட் பாக்கெட்டுகளில் இருக்கும் மொபைல் அல்லது மைக்ரோ கேம் வீடியோக்கள் எப்போதும் தினகரன் மற்றும் அவருக்கு நெருக்கமான பகுதிகளை பதிவு செய்தபடியே இருக்குமாம். 

முழுக்க முழுக்க தினகரனின் பாதுகாப்புக்காக ! அதாவது தினகரன் பொதுவெளியிலிருக்கும் போது அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஏதாவது அச்சுறுத்தல் நடக்கிறதா என்பதை கவனிக்கவே இந்த ஏற்பாடாம். இந்த கேமெரா டிராப்பில்தான் அமைச்சர் வந்து சந்தித்ததும் பதிவாகியிருக்கிறது! ஒருவேளை அமைச்சர் மறுத்தால், இந்த பதிவை வெளியிடுவோம்! என்கிறார்கள் தினாவின் நெருங்கிய வட்டார நபர்கள். 
என்னடா நடக்குது நாட்டுல?!