தற்போது அதிமுகவில் குடும்ப அரசியல் விவகாரம் வெடித்துள்ள நிலையில்.அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எதிர் கோஷ்டியினரை கொந்தளிக்க செய்துள்ளது.

சொந்த கட்சியினருக்கே தெரியாமல் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை  சின்னத்தம்பி புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் அக்கட்சியினர் மத்தியில் பரவத் தொடங்கியதும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்ட போது, தம்பிதுரைக்கு எதிராக விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் விருப்பமனு கொடுத்திருந்தார் அதேபோல அந்த சமயத்தில், பிப்ரவரி 23 ந் தேதி சத்தமில்லாமல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பதவிக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால் கூட்டுறவு வங்கி மாவட்டத் தலைவர் தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

அந்த சமயத்தில், 21 இயக்குநர்களுக்கு 32 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு செய்த 11 பேர் வாபஸ் பெற்றதால், மீதமிருக்கும்  21 இயக்குநர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  

இந்தநிலையில், நேற்று ஜூன்  சத்தமில்லாமல் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தார். துணைத் தலைவர் பதவிக்கு உசிலங்குளம் கே.ஆர்.கணேசன் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்களுக்கு வேறு யாரும் போட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  சின்னத்தம்பி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக பொறுப்பு ஏற்கவுள்ள தகவல் அறிந்த அமைச்சரால் ஒதுக்கப்பட்ட அதிமுகவினர் முக்கிய புள்ளிகள் சிலர் 12ந்தேதி நடக்கவுள்ள அதிமுக கட்சி கூட்டத்தில் இதுபற்றி விவாதம் நடத்த உள்ளார்களாம். 

விஜயபாஸ்கரின் தொகுதியான விராலிமலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக. வேட்பாளர் தம்பிதுரையைவிட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சுமார் 62 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றார். கரூர் தொகுதியில் தம்பிதுரைக்கு பதிலாக தனது தந்தைக்கு சீட் மறுக்கப்பட்டதால், விஜயபாஸ்கர் தனது தொகுதியில் தம்பிதுரைக்கு ஆதரவாக வேலை பார்க்கவில்லை என சொல்லபப்டுகிறது.