முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை கைவிட்டு விட வேண்டாம் என்று மன்றாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5ந் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போதே இரவு எட்டு மணி அளவில் தன்னை வந்து சந்திக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தகவல் சென்றது. ஆனால் அன்றைய தினம் சி.பி.ஐ வந்து சென்ற டென்சனில் இருந்த விஜயபாஸ்கர் முதலமைச்சரை நேரில் போய் சந்திக்கவில்லை. மாறாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மட்டும் பேசினார். 

தொலைபேசியில் பேசிய போது விஜயபாஸ்கர் பதவி விலகுவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை. மாறாக சி.பி.ஐ சோதனையின் போது நிகழ்ந்தவற்றை மட்டும் முதலமைச்சர் கேட்டு தெரிந்து கொண்டார். இந்த நிலையில் திடீரென நேற்று பிற்பகல் 3 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார். ஏ.சி.காரில் சென்று இருந்த போதும் முதலமைச்சர் வீட்டிற்குள் செல்லும் போது வியர்க்க விறுவிறுக்க விஜயபாஸ்கர் சென்று இருந்தார். சுமார் 20 நிமிடங்கள் முதலமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகும் இருக்கமான முகத்துடனேயே விஜயபாஸ்கர் வெளியேறினார். உள்ளே நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விசாரித்த போது, உடனடியாக பதவி விலகுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விஜயபாஸ்கரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள், பிரச்சனையை சரி செய்துவிடுகிறேன் என்று முதலமைச்சரிடம் விஜயபாஸ்கர் மன்றாடியதாக கூறப்படுகிறது. ஆனால் சி.பி.ஐ விரைவில் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு விசாரணைக்கு அழைக்க உள்ள தகவலை எடுத்துக்கூறிய முதலமைச்சர், அமைச்சராக நீங்கள் விசாரணைக்கு சென்றால் நன்றாக இருக்காது என்று முகத்தில் அடித்தது போல் கூறியதாக கூறப்படுகிறது.

 

 இதனால் பதறிப்போன விஜயபாஸ்கர் தன்னை கைவிட்டு விட வேண்டாம் என்று மன்றாடியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு நிச்சயம் கட்சி உங்களுடன் இருக்கும்  ஆனால் அதற்கு நீங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை என்று முதலமைச்சர் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைதொடர்ந்தே இறுக்கமான முகத்துடன் விஜயபாஸ்கர் வெளியேறியுள்ளார்.