புதுக்கோட்டை அருகே புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக் கூறினார்.

 பின்னர், எம்.ஜி.ஆர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு இரவு சென்னைக்கு திரும்பினார். பின்னர், அமைச்சரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். கார் கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மாறுமாறாக ஓடி புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. 

இந்த விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.