சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவதை பற்றி அதிமுகவுக்கு கவலையில்லை அவர் தேவையில்லை என ஒதுக்கி தான் நாங்கள் அரசியல் செய்கிறோம் என அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளது அமைச்சர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர்மாவட்டம்,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , கூட்டுறவுத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரியம் ஆகிய மூன்று துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .

 அமைச்சர் வீரமணி செய்தியாளர்களை சந்தித்த போது... "தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் தங்களின் நியாயவிலைக்கடை பொருட்களை பெறுவதற்காக தமிழக முதல்வர் நகரும் நியாயவிலைக்கடைகளை துவங்கி வைத்தார் . அதன் ஒரு பகுதியாக இம்மாவட்டத்தில் நகரும் நியாயவிலைகடைகளை துவங்கி வைத்துள்ளேன், இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவது பற்றி முதல்வருக்கோ அதிமுகவுக்கோ எந்த கவலையுமில்லை . நாங்கள் அவர் தேவையில்லை என ஒதுக்கிவைத்துவிட்டுதான் அரசியல் நடத்துகிறோம் மக்களும் அவர்களை ஒதுக்கிவிட்டார்கள் என்று பேசிய அவர், டிடிவி எதற்காக டெல்லி சென்றார் என்பது எங்களுக்கு தெரியாது, திமுக பிரமுகர் வீடுகளில் சி.பி.,ஐ ரெய்டு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்