அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறை தாத்தா வீட்டிற்கு சென்ற உதயநிதிக்கு பூரண கும்ப வரவேற்பு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாம் அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறை தனது தாத்தா பிறந்த ஊரான திருக்குவளைக்கு இன்று சென்றார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திருக்குவளைக்கு இன்று வருகை தந்தார். திருவாரூருக்கு நேற்று வந்த அவர் அங்கிருந்து சாலை மார்கமாக திருக்குவளை வருகை தந்த நிலையில் மாவட்ட எல்லையான கொளப்பாடு பகுதியில் திமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் மாபெரும் தமிழாற்று படை நூலை பரிசாக வழங்கி வரவேற்பு அளித்தார். மேலும் சாலையில் இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கையில் வரவேற்பு பதாகைகளை ஏந்தி அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக திருக்குவளை வருகை தருவதை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. காரில் இருந்தப்படியே அதனை தொட்டு வணங்கினார். தொடர்ந்து அவருக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள தனது தாத்தா கலைஞர் கருணாநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான முரசொலி மாறன் உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசார துவக்கம் 2020 நவம்பர் 20ம் தேதி தலைவர் பிறந்த திருக்குவளை இல்லம் முன்பாக தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராகி முதல் முறை மீண்டும் வருகை புரிந்துள்ளேன். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவேன் என தனது வருகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்து கையெழுத்திட்டுள்ளார்.
பரபரப்பான பேருந்து நிலையத்தை மணமேடையாக்கிய காதல் ஜோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுகவினர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பேட், பந்து உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை பரிசாக வழங்கினர். அவருடன் அமைச்சர்கள் மெய்ய நாதன், சக்கரபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.