‘விஜய் சார் விஜய் சார் நீங்க முதலமைச்சரா வராம நாங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கோம். அதனால உடனே முதலமைச்சரா வாங்க ‘ என்று மக்கள் அழைக்கிறார்களா? நடிகராக சர்க்கஸ் காட்டும் வேலையை மட்டும் அவர் பார்க்கட்டும்’ என்று நடிகர் விஜயை காட்டமாக நக்கலடித்தார் வருவாய்த்த்துறை அமைச்சர் ஆர்,பி.உதயக்குமார்.

நேற்று நடந்த ‘சர்கார்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது முதல்வர் கனவு குறித்து விஜய் பேசியதும் ஒருவேளை அப்படி முதல்வரால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவேன் என்று கூறியதும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அதிருப்தியாளர்களின் வெளிப்பாடாக இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் விஜயை மட்டுமல்ல அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரையும் ஒரு பிடி பிடித்தார்.

‘அரசியலும் முதலமைச்சர் பதவியும் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் அவ்வளவு ஈஸியாகத் தெரிகிறது, விஜய் ஏதோ உயரத்திலிருந்து குதிக்கவும் அவரது அப்பா ஒரு வலையுடன் காத்திருந்து அவரைப்பிடிக்கவும் துடிக்கிறார்கள். மக்கள் விஜய் எப்படா முதல்வராவார் என்று தவித்துக் காத்திருப்பது இவர்கள் நினைப்பது பரிதாபமாக இருக்கிறது.

விஜய் சினிமாவில் சர்க்கஸ் காட்டும் வேலையைக்காட்டுவதோடு ஒழுக்கமாக நிறுத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் நினைப்பது போல் முதல்வர் பதவி என்பது ஒரு பக்கத்துக்கு வசனம் பேசிவிட்டு கேரவனில் மூன்று மணிநேரம் ரெஸ்ட் எடுப்பது கிடையாது’ என்று சகட்டுமேனிக்கு விஜய்க்கு எதிராக பொழந்து தள்ளினார் அமைச்சர் உதயகுமார்.

இந்த சண்டை வளர்ந்தால் சந்தோஷமே.