அமைச்சர்கள் மற்றும் விஜய் ரசிகர்களால் மிரட்டப்பட்டு வரும் மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் விஜய் ரசிகர்களால் மிரட்டப்பட்டு வரும் மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். மதுரை ஆதீனத்திற்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என அவர் மதுரை காவல் ஆணையரிடம் இன்று மனு அளித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை ஒவ்வொரு மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்வைத்திருக்கிறார். மொத்தத்தில் திமுக பாஜக இடையே மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலைத்துறையை கலைக்க வேண்டுமென மதுரை ஆதினம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரின் கருத்துக்கள், பேச்சுக்கள் அனைத்தும் தமிழக அரசை தாக்கும் வகையிலேயே இருந்து வருகிறது. இந்து சமய அறநிலைத்துறையிடமிருந்து கோவில்களை மீட்டு அதை ஆதினங்கள் மற்றும் மடங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்.

ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என சொல்கிறார்கள், ஆனால் கோவில்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? என கேள்வி எழுப்பியுள்ள அவர், கோவில்களில் அரசியல்வாதிகள் நுழைந்து விட்டனர், பல கோவில்களில் அரசியல்வாதிகளே தக்கார்களாக உள்ளனர் என்றும் விமர்சித்தார். அவரின் இந்த பேச்சுக்கு பதிலளித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, தொடர்ந்து ஆதீனம் அரசியல் பேசிவந்தால், அவரின் இதுபோன்ற பேச்சு தொடர்ந்தால் இந்து சமய அறநிலைத்துறை அதை அனுமதிக்காது, அவரின் இந்தப் பேச்சுக்கு பதில் சொல்ல பல வழிகள் இருக்கிறது என எச்சரித்தார். இதேபோல் நடிகர் விஜய்யை விமர்சித்து மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆதீனத்துக்கு எதிராக அவர்கள் எதிர்வினையாற்ற தொடங்கியுள்ளனர்.

மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போட்டு இருக்கிறா நீங்களெல்லாம் தளபதியை பற்றி பேசலாமா என போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மதுரை ஆதீனத்திற்கு திமுக மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஆதீனத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை ஆதினம் அரசியல்வாதிகளாலும், நடிகர் விஜய்யின் ரசிகர்களாலும் மிரட்டப்பட்டு வருகிறார். அரசியல் வாதிகளை போல ஆதினம் நடந்து கொள்கிறார் என அமைச்சரே அவரை அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆதினத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு கிடையாது ஆதினத்தின் கருத்து அரசியல்வாதிகளுக்கும் நடிகர் விஜய்க்கு எதிரானது கிடையாது, இதை விஜய் ரசிகர்களும் அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து ஆதினத்திற்கு மிரட்டல் வருவதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாநில அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லையென்றால் மத்திய அரசை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.