தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் வாதிகள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பழனி, குமரகுரு, சதன் பிரபாகரன், அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரான வளர்மதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு போரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வருக்கு நெருக்கமான அமைச்சரான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதலே பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்து வந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்த நிகழ்வில் அமைச்சர் தங்கமணி கலந்துகொள்ளவில்லை.

 

 

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், 'TNPFCL' சார்பில் கொரோனா தடுப்பு, நிவாரண பணிக்கு அமைச்சர் தங்கமணி ரூபாய் 5 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கினார். அதில் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் துறைசார்ந்த உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். தற்போது அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.