Asianet News TamilAsianet News Tamil

இபிஎஸ்ஸால் பொறுத்து கொள்ள முடியாமல்.. போகிறபோக்கிலே புழுதிவாரி தூற்றுகிறார்.. அமைச்சர் தங்கம் தென்னரசு..!

மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் மீண்டும் ஒருமுறை இங்கே தெளிவாக சொல்கிறேன். மீத்தேன் திட்டம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலக்கட்டம் வரை தமிழ்நாட்டில் ஒருபோதும் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவேயில்லை என்பதை நான் அருதியிட்டு சொல்ல முடியும். 

Minister thangam thennarasu slams  Edappadi Palanisamy
Author
First Published Apr 6, 2023, 7:40 AM IST | Last Updated Apr 6, 2023, 7:48 AM IST

மீத்தேன் திட்டத்தை பொறுத்தவரை திமுக ஆட்சி இருந்தவரை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேற்றவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு;- சட்டப்பேரவையில் முதலமைச்சர் தமிழ்நாட்டினுடைய நெற்களஞ்சியமாக இருக்கக்கூடிய காவிரி டெல்டா பகுதிகளில் அதையொட்டி இருக்கக்கூடிய வேளாண் விளைநிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதியினை அளிக்காது என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றபோது மிகுந்த பெருமையோடும், மிகுந்த உணர்வோடும் அந்த அறிவிப்பை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கின்ற வகையிலே மாத்திரமல்லாமல், டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் என்கின்ற அந்த உணர்வோடும் தான் அறிவிப்பதாக சொன்னபோது, தமிழ் உணர்வுகொண்டவர்கள் உள்ளபடியாக நம்முடைய விவசாய பூமியின் மீது அக்கறை கொண்டிருக்கக்கூடிய அத்தனை  உறுப்பினர்களும் அதைப் பாராட்டி, வரவேற்று, கையொளி எழுப்பி முதலமைச்சருக்கு தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்தார்கள். 

இதையும் படிங்க;- தனியாருக்கு தாரை வார்ப்பது பற்றி எல்லாம் பாஜக பேசுவது வேடிக்கையாக உள்ளது.. அமைச்சர் தங்கம் தென்னரசு..!

Minister thangam thennarasu slams  Edappadi Palanisamy

முதலமைச்சருக்கு கிடைக்கக்கூடிய இந்தப் பாராட்டை அரசியல் அரங்கில் அவர் இன்றைக்கு ஆணித்தரமாக, திட்டவட்டமாக எடுத்து வைத்திருக்கக்கூடிய இந்த முடிவு, டெல்டா விவசாயிகளுக்கு மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே இருக்கிற ஒட்டுமொத்த வேளாண் பெருங்குடி மக்கள் அதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் அவருக்கு, அவருடைய மதிப்பிற்கு இன்றைக்கு பெரிய அளவில் பெருமை சேர்த்திருக்கிறது என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சியினுடைய தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கின்றபோது, முதலமைச்சர் அவர்களைக் குறிப்பிட்டு, இந்த டெல்டாகாரர் தான் மீத்தேன் திட்டத்திற்கு ஆதரவு அளித்தார் என்று போகிறபோக்கிலே புழுதிவாரி ஒன்றை தூற்றிவிட்டுச் சென்றிருக்கிறார். 

Minister thangam thennarasu slams  Edappadi Palanisamy

மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் பலமுறை தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியிருக்கிறது. ஏறத்தாழ 3700 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பாக வரும் என்கின்ற இந்தத் திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பிலே இருந்த காலக்கட்டத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 4ஆம் நாள் இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அப்படி மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அடிப்படைக் காரணம், இந்தத் திட்டத்தின் வாயிலாக வாட் போன்ற வரிகளின் மூலமாக மாநில வருவாய் உயரும் என்பது ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்திலேயே மிகக் குறிப்பாக இந்தத் திட்டத்தின் காரணமாக எழக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பை குறித்து முறையான ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

Minister thangam thennarasu slams  Edappadi Palanisamy

அப்படி சுற்றுச்சூழல் ஆய்வின்போது, பாதிக்கப்படக்கூடிய உழவர்கள் இருப்பார்கள் என்று சொன்னால், அவர்களுடைய நிலங்கள் பாதிப்படையும் என்று சொன்னால், அந்த திட்டங்களுக்கான எதிர்ப்பினை அவர்கள் தெரிவிக்க முடியும் என்கின்ற அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொண்டபோது, தஞ்சை மாவட்டப் பகுதியிலே இருக்கக்கூடியவர்கள், டெல்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் தங்கள் நிலங்கள் பாதிக்கும் என்று பெரும் எதிர்ப்பினை அன்றைக்கே அவர்கள் தெரிவித்தார்கள். அப்படி எதிர்ப்பு வருகின்றபோது கூட, அதிமுக அரசு விவசாயிகள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டு அவர்களது குரலை நசுக்கக்கூடிய முறையில் அவர்களை கைது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தி இதுபோன்ற அத்தகைய நடவடிக்கைகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஈடுபடாமல் மீத்தேன் திட்டத்தை அதையெல்லாம் செய்து நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்பு ஏதும் இல்லாமல் அவர்களுடைய குரலுக்கு செவிசாய்க்கக்கூடிய வகையில்  அன்றைக்கு நம்முடைய அரசு இருந்தது. 

இதையும் படிங்க;-  டெல்டா மாவட்டத்துக்காரன் எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின்.! மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது ஏன்.? இபிஎஸ்

Minister thangam thennarasu slams  Edappadi Palanisamy

குறிப்பாக, அதிமுக அரசு 2011 ஆம் ஆண்டு துவங்கி அதை இரத்து செய்வதற்கு முன்பாகவே அதற்கான அந்த லைசென்ஸ் காலமும் முடிவடைந்து, அதற்குப் பிறகுதான் 2017-ல் லைசென்ஸ் காலம் முடிந்த ஒரு திட்டத்திற்கு இரத்து செய்வதான ஒரு அறிவிப்பை அதிமுக வெளியிட்டது என்பதுதான் வரலாற்று உண்மையாகும். அப்படி அவர்கள் அதற்கு ஒரு அரசாணையினை வெளியிடுவதற்கும், இரத்து செய்வதற்கும் அடிப்படையான காரணமாக அமைந்தது, திராவிட முன்னேற்றக் கழக அரசு அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலே கொண்டு வந்திருக்கக்கூடிய குறிப்பாக அந்த சுற்றுச்சூழல் குறித்து ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற அந்த ஷரத்து தான். அந்த ஷரத்து இருந்த காரணத்தால்தான், பின்னாளில் அதை இரத்து செய்வதற்கு அது மிகவும் உதவிகரமாக இருந்தது. அந்த ஒப்பந்தத்தில் அப்படி ஒரு ஷரத்து இருந்த காரணத்தால்தான், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மூலமாக ஒரு கமிட்டியும் அமைக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து அந்த அரசாணையும் அன்றைய அதிமுக ஆட்சியினால் வெளியிட முடிந்தது. 

எனவே, மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் மீண்டும் ஒருமுறை இங்கே தெளிவாக சொல்கிறேன். மீத்தேன் திட்டம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலக்கட்டம் வரை தமிழ்நாட்டில் ஒருபோதும் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவேயில்லை என்பதை நான் அருதியிட்டு சொல்ல முடியும். எடப்பாடி பழனிசாமி அவருடைய தலைமையிலான அதிமுக ஆட்சி எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்தது என்பதையெல்லாம் நான் இந்த நேரத்தில் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Minister thangam thennarasu slams  Edappadi Palanisamy

எனவே, இந்தத் திட்டங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டது அதிமுக ஆட்சியில், எடப்பாடி பழனிசாமி பொறுப்பிலே இருந்த காலத்திலேதான் இவை நடைபெற்றன என்பதை நான் தெரிவித்து, தன் மீது வந்திருக்கக்கூடிய இந்தக் குற்றச்சாட்டுகள் அல்லது தான் தவறு செய்தவர் பிறரை நம்பமாட்டார் என்கின்ற அந்த அடிப்படையில், எல்லா தவறுகளையும் தாங்கள் செய்துவிட்டு, அதை மூடி மறைக்கக்கூடிய வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்தச் செயலை அதிமுக-வும், அதனுடைய தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என  தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios