பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் 680 மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மக்களை கேட்டுக்கொண்டார். தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் வேலுமணி பேசியதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியில் 33 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர், இவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளையும் மற்றும் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள 200 கூட்டங்களிலும் 200 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களை குழு தலைவராக நியமித்து மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. 

இக்குழுவில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். இக்குழுவானது வைரஸ் தொற்று பாதித்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்தல் மற்றும் அவர்களது தொடர்புகளை கண்டறிந்து கண்காணித்து வைரஸ் தொற்றின் தீவிரம் கருதி உடனுக்குடன் தகவல் தெரிவிப்பார்கள். மேலும் 11,500 களப்பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். தொடர்ந்து இந்த பணிகளில் மாநகராட்சி பள்ளி ஆசிரிய ஆசிரியைகளும் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல், மறு பயன்பாட்டுடன் கூடிய துணியாலான முகக்கவசம் வழங்குதல், வீடு வீடாக சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்,  கர்ப்பிணிப் பெண்கள், உயர் ரத்த அழுத்த  நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குதல், கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆகிய பணிகளை தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்படுத்துவார்கள். தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. 

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துடன் இணைந்து, ஏற்கனவே ஆயிரம் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. குழாய்கள் மூலம் குடிநீர் பெற வசதி இல்லாத குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் லாரியில் வரும் தண்ணீரை பிடிப்பதற்காக பெருமளவில் கூடுவதை தவிர்க்கவும், வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கூடுதலாக 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 350 சின்டெக்ஸ் தொட்டிகளை அமைக்க வேண்டும், இதன் மூலம் மக்கள் சமூக நிலைகளை கடைப்பிடித்து தண்ணீர் பிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் மூலமாக ஏற்கனவே ஊரடங்குக்கு முன்புவரை நாளொன்றுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் 2.75 லட்சம் நபர்களுக்கும், பிற 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் 1.25 லட்சம் நபர்களுக்கும், ஆகமொத்தம் நாளொன்றுக்கு 4 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் ஊரடங்கு காலத்தில் பெருநகர சென்னை  மாநகராட்சியில் 4.55 லட்சம் நபர்கள், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 2.55 லட்சம் நபர்கள் என மொத்தம் 7.10 லட்சம் நபர்கள் நாளொன்றுக்கு அம்மா உணவகங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர். ஊரடங்கு காலம் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை அம்மா உணவகங்களில் மொத்தம் 5.34 கோடி இட்லிகளும், 2.7 கோடி கலவை சாதனங்களும், 81.11 லட்சம் சப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 4.8 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.