அனைவருக்கும் ஒரே எதிரி, கொரோனா மட்டும்தான், அதை விழிப்புணர்வால் ஒன்றிணைந்து வெல்வோம் என தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. எஸ்.பி வேலுமணி அவர்களின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் பொது மக்களுக்கு தெரிவித்துள்ளதாவது:- வணக்கம்... இது ஒரு முக்கியமான தருணம். இதுவரை நாம் எடுத்துள்ள முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமெனில், இனிவரும் நாட்களில் நாம் எவ்வளவு கவனமாக, விழிப்புணர்வாக இருக்கப் போகிறோம் என்பது மிகவும் முக்கியமாகும்.அரசை குறை கூறுவது, தோய்த்தொற்றை பற்றிய அச்சத்தை உண்டு பண்ணுவது, மக்களின் மன உறுதியை குலைப்பது, முன்களப்பணியாளர்களை அவமதிப்பது போன்ற செயல்கள் நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடுவது போன்றதாகும். 

மக்களின் மேல் அக்கறை உள்ளவர்கள், அரசியல் நண்பர்கள், தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், வணிகத் தலைவர்கள், முதலாளிகள், பிரபலங்கள், சமூக மன்றங்கள் என அனைவருக்கும், இதை ஒரு வேண்டுகோளாக, அன்புக் கட்டளையாக விடுக்கிறேன்.  உங்களைப் பின்பற்றும் தொண்டர்கள், உறுப்பினர்கள், ரசிகர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும், கண்டிப்பாக முகக்கவசம் அணிவதின் அவசியத்தையும், அணியாதவரிடமிருந்து விலகி இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வையும், மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது தலைமையிலான அரசு, மக்களின் பாதுகாப்பிற்காக அல்லும் பகலும் அரும்பாடுபட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அரசின் முயற்சிகள் நம் நன்மைக்காவே என்று உணர்ந்து பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பையும், தங்களைச் சுற்றி இருப்பவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். கொரோனாவை முழுவதுமாக வெல்ல முகக்கவசம் அணிவோம்!முகக்கவசம் அணியாதவரிடமிருந்து விலகி இருப்போம்! சமூக விலகலை கடைபிடிப்போம்! என்கிற உறுதியை அனைவரும் எடுப்போம், பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வாழ்வோம். போர்க்களங்கள் ஓராயிரமாயினும் இன்றைக்கு உலகமெங்கும் நம் அனைவருக்கும் ஒரே எதிரி,கொரோனா என்கிற கொடிய நோய்த்தொற்று!விழித்தெழுவோம்! விழிப்புணர்வால் வெல்வோம்! என அவர் தெரிவித்துள்ளார்.