நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் திடீரென அதிமுகவில் இணைந்ததன் பின்னணியில் எஸ்.பி.வேலுமணியின் வியூகம் இருந்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டுள்ள அதிமுக களத்தில் திமுகவிற்கு நிகரான செயல் வீரர்களை கொண்டுள்ளது. ஆனால் செய்தித் தொடர்பாளர்கள், டிவி விவாதங்களில் பங்கேற்போர் திமுகவினருக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையே உள்ளது. அண்மையில் டிவி விவாதம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியிடம், எம்ஜிஆர், எம்ஜிஆர் என்று கூறுகிறீர்கள் உங்களுக்கு பின்னால் ஜெயலலிதா புகைப்படம் மட்டுமே உள்ளது என்று பயில்வான் ரங்கநாதன் கலாய்த்தார். ஆனால் லைவ் சென்று கொண்டிருக்கிறது என்பது கூட தெரியாமல் புகழேந்தியின் பின்புறம் இருந்த ஜெயலலிதா படத்தை தூக்கிவிட்டு ஒருவர் எம்ஜிஆர் புகைப்படத்தை வைத்தார்.

இதே போல் விவாதங்களில் பங்கேற்கும் கோவை செல்வராஜ் போன்றோர் உளறிக் கொட்டுவது அதிமுக தலைமைக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பில் பாய்ன்ட் பிடித்து பேசும் போது அதிமுகவினரால் அவர்களுக்கு விவாதங்களில் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்காக தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்க வந்துள்ள சுனில் டீமால் தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவினருக்கு பதிலடி கொடுக்க சரியான ஆள் இல்லை என்று ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து அதிமுகவை சேர்ந்த சிலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து கல்யாணசுந்தரம் விலகினார். அந்த கட்சியில் சீமான் ஆக்ரோசமாக பேசும் நிலையில் கல்யாணசுந்தரம் நிதானமாக அதுவும் பொறுமையாக தனது கருத்துகளை எடுத்து வைக்க கூடியவர். டிவி விவாதங்களில் திமுகவினர் மட்டும் அல்லாமல் பாஜகவினரும் கூட கல்யாணசுந்தரம் கேட்கும் கேள்விகளால் திணறியது உண்டு. இப்படிப்பட்ட ஒருவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி துவங்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். இந்த தகவல் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காதுகளுக்கு எட்டியது.

கல்யாணசுந்தரமும் கோவையை சேர்ந்தவர். அந்த வகையில் அமைச்சர் வேலுமணி எளிதாக அவரை தொடர்பு கொண்டார். இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு வருமாறு கல்யாணசுந்தரத்தை அமைச்சர் கேட்டுக் கொண்டார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்து ஒதுங்கிய கல்யாணசுந்தரம் பிறகு தானாக முன்வந்து அமைச்சரை அணுகியுள்ளார். அதிமுக செய்தி தொடர்பாளர் பதவி என்கிற ஒரே ஒரு கோரிக்கை தான் கல்யாணசுந்தரம் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் வேலுமணி செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் சென்னை வந்த கல்யாணசுந்தரத்தை முதலமைச்சரை பார்க்க அழைத்துச் சென்றார் வேலுமணி.

தொடர்ந்து முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கல்யாணசுந்தரம் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ்சையும் சந்தித்தார். இதனை தொடர்ந்து மறுநாளே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கல்யாணசுந்தரத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவை அனைத்தையும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் சுனில் டீம் ஆர்கனைஸ் செய்தனர். புதிய கட்சி எல்லாம் வேலைக்கு ஆகாது,  அதிமுகவிற்கு வந்தால் விரும்பும் பதவி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றெல்லாம் அமைச்சர் வேலுமணி கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்துள்ளாராம்.