Asianet News TamilAsianet News Tamil

கட்டணமில்ல பேருந்தில் பெண்களிடம் வயது, ஜாதி கேட்டது ஏன்.? இபிஎஸ் கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்த சிவசங்கர்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இத்தகைய குரலை எடப்பாடி பழனிசாமி எழுப்புவது என்ன காரணம் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி. அந்த டப்பிங் வாய்ஸ் இங்கே ஒலிக்கிறது என சிவசங்கர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். 

Minister Sivashankar explains why women are asked about their caste and age in free buses KAK
Author
First Published Nov 27, 2023, 6:14 AM IST | Last Updated Nov 27, 2023, 6:14 AM IST

கட்டணமில்லா பேருந்தில் பெண் பயணிகளிடம் ஜாதி, வயது, மொபைல் எண் கேட்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் பதிலளித்துள்ளார். அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மகத்தான திட்டம் "மகளிர் விடியல் பயணம்". அதன் மகத்தான வெற்றி நாடறிந்த ஒன்று. இத்திட்டத்தின் வெற்றியை பார்த்து,இத்திட்டத்தை மற்ற மாநிலங்கள் செயல்படுத்துவதை பார்த்து வருகிறோம். இந்த வெற்றியை பொறுக்காத சிறுமதியாளர்கள் இந்த திட்டத்தை சிறுமைப்படுத்த பல முயற்சியை எடுத்தார்கள்.  கோயம்புத்தூரில் ஒரு வயதான பெண்மணியை வைத்து நாடகம் அரங்கேற்றி பார்த்தார்கள். "எனக்கு இலவச பயணம் வேண்டாம். டிக்கெட் கொடு" என கேட்க வைத்து, அதை வீடியோ எடுத்து   சமூக வலைதளங்களில் வெளியிட்டு பார்த்தது எடப்பாடி டீம். அதை பார்த்து பெண்கள் கட்டணமில்லா பயணத்தை புறக்கணித்து விடுவார்கள் என மனப்பால் குடித்தார்கள்.

Minister Sivashankar explains why women are asked about their caste and age in free buses KAK

 இந்த பொய்யையும், புரட்டையும் புறந்தள்ளி தொடர்ந்து "விடியல் பயணத்தை" பயன்படுத்துகிறார்கள் தமிழ்நாட்டு பெண்கள். இதற்கு சாட்சி, இந்த திட்டம் துவங்கியதிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டு பெண்கள் மேற்கொண்டிருக்கும் கட்டணமில்லா பயணம் 380 கோடியை தாண்டியிருப்பதே. கோவை பெண்ணின் முயற்சியின் தொடர்ச்சியே எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை. பயணம் செய்பவர்களின் ஜாதியை கேட்டு விட்டார்கள் என்று துடிக்கிறார். சமூகநீதிக்கு எதிரான தினமலர் பத்திரிக்கை துடிப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால் பேரறிஞர் அண்ணா பெயரிலான கட்சியின் பொதுசெயலாளராக இருந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமி இப்படி அறிக்கை விடுவது தான் கொடுமை. 

Minister Sivashankar explains why women are asked about their caste and age in free buses KAK

"ஆரியம் - திராவிடம் குறித்த ஆளுனர் ரவியின் பேச்சு" குறித்து கேட்டதற்கு, நான் புராணம் படித்தவனல்ல என்று பதிலளித்த எடப்பாடி அதற்குள் எந்த புராணத்தை படித்து இந்த அறிக்கையை வெளியிட்டார். சாதிகளின் பெயரை சொல்லி மக்களை அடுக்கு முறையில் அமுக்கி வைக்கப்பட்டவர்களை அந்த சாதியின் பெயராலேயே கைதூக்கி விடுவது தான் இடஒதுக்கீடு. இது தான் சமூகநீதி. இதெல்லாம் புராணம் படித்தால் தெரியாது, பெரியாரை படித்தால் தான் புரியும்.  ஒரு அரசு, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, அந்தத் திட்டம் மக்களுக்கு எந்த அளவிற்கு பலனளிக்கிறது என்று ஆராய்ந்து அதை இன்னும் செம்மைப் படுத்த முனைவது மக்கள் நல அரசின் கடமை. அந்த வகையில் தான் மாநில திட்டக்குழு விடியல் பயணம் குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த ஆய்வின் முடிவில்,  விடியல் பயணம் மூலமாக சராசரியாக ஒவ்வொரு மகளிருக்கும் ரூபாய் 88, பேருந்து கட்டணமாக செலவிட்டது மிச்சமாகிறது என்பது தெரிய வந்தது. 

Minister Sivashankar explains why women are asked about their caste and age in free buses KAK

அதன் அடுத்த கட்ட ஆய்வு தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு இந்தத் திட்டம் பயன்படுகிறது என்று ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அறிந்து அதனை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி, இந்திய துணை கண்டத்தின் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இத்தகைய குரலை எடப்பாடி பழனிசாமி எழுப்புவது என்ன காரணம் என்பது ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தால் புரியும். சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி. அந்த டப்பிங் வாய்ஸ் இங்கே ஒலிக்கிறது. 

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் குறைவாக இருக்கின்றன, ஓசி டிக்கெட் என்றார்கள் என்ற அவர் அறிந்த புராணத்தை, வழக்கம் போல் பாடியிருக்கிறார். அப்படி எல்லாம் இருந்தால் 40 சதவிகிதமாக இருந்த மகளிர் பயணம் எப்படி 68 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் ? அப்படி இருந்தால் எப்படி ஒரு நாளைக்கு 49 லட்சம் பெண்கள் விடியல் பயணத்தை மேற்கொள்வார்கள் ? அப்படி இருந்தால் இதுவரை எப்படி 380 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ?

Minister Sivashankar explains why women are asked about their caste and age in free buses KAK

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் மகத்தான திட்டங்களான "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" போன்ற திட்டங்களாலும், இன்ன பிற நலத்திட்டங்களாலும் தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் பின்னால் திரள்வதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலில் ஒரு எதிர்கட்சித்தலைவராக இது போன்று அறிக்கை விடுவது எடப்பாடி பழனிசாமி அவர்களின் வாடிக்கை தான். ஆனால் அதற்காக திராவிட இயக்கத்தின் அடிப்படைகளை மறந்து விடக்கூடாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios