அணிலால் மின்வெட்டு ஏற்படுகிறது எனக் கூறிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில், அணிலால்தான் மின்வெட்டு ஏற்பட்டதற்கான ஆதாரம் இதோ என வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அணிலால் மின்வெட்டு ஏற்படுகிறது எனக் கூறிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில், அணிலால்தான் மின்வெட்டு ஏற்பட்டதற்கான ஆதாரம் இதோ என வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பலரும் ஆதரித்தும் விமர்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, மக்கள் அதை வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக-பாஜக, திமுக அரசின் செயல்பாடுகளில் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை, அறிவிக்கப்படாத மின்வெட்டு போன்ற பிரச்சனைகளை முன்வைத்து அரசை விமர்சித்து வருகின்றன. பொதுமக்களும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தது முதலே இந்த மின் வெட்டு பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,

அதிமுக ஆட்சியில் டிசம்பர் மாதத்திற்கு பிறகு முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வில்லை, எனவே மாதாந்திர பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது, சில இடங்களில் மரங்கள் வளர்ந்து மின்கம்பிகளில் அணியில் ஓடுவதால் இரண்டு மின்கம்பிகள் ஒன்றாக உரசி மின்தடை ஏற்படுகிறது என விளக்கம் அளித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த விளக்கத்தை பலரும் கலாய்த்து கேலி கிண்டல் செய்தனர். என்ன? அணில் மின்வெட்டுக்கு காரணமா என கேள்வி எழுப்பிய பலர், அமைச்சர் செந்தில் பாலாஜியை கலாய்த்து வந்தனர், பல மீம்ஸ்கள் பறந்தன, இது குறித்து பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அணிலால் மின்தடை ஏற்படுகிறது என சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கர் விருது அல்லது நோபல் பரிசே கொடுக்கலாம், வெளிநாட்டுக்கு சென்று அணில்கள் திரும்பிவந்து மின்தடை ஏற்படுகிறது போலும், தெர்மாகோல் விட்டதாக என்னை நவீன விஞ்ஞானி என திமுகவினர் கிண்டல் செய்தனர்.
தற்போது என்னையே மிஞ்சிவிட்டார் செந்தில் பாலாஜி என்று கிண்டலடித்தார். அமைச்சரின் அணில் விளக்கத்தை வைத்து இன்றளவும் செந்தில்பாலாஜியை கலாய்த்து வருகின்றனர். ஆனால் தான் கூறியது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் செந்தில்பாலாஜி ஏற்கனவே மின் கம்பிகளில் அணில் ஓடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார், ஆனாலும் அவர் மீதான விமர்சனம் தொடர்கிறது. இந்நிலையில்தான் தற்போது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, சில தினங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் மின் வாரியத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் சீரமைக்கும் பணியில் ஈடுபடுவதை வீடியோ எடுத்துள்ளார்.

அந்த இடத்தில் அணில் ஒன்று இறந்து கிடக்கிறது, அப்போது அந்த நபர் மின்வாரிய ஊழியரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி மின் தடைக்கு அணியில் காரணம் எனக் கூறியதை பலரும் விமர்சித்து வருகிறார்கள் இப்போது அதற்கான ஆதாரம் இதோ இருக்கிறதே என அந்த மின்சார ஊழியரிடம் கேள்வி எழுப்புகிறார், ஆமாம் நான் ஸ்ரீரங்கம் மின்வாரியத்தின் கேங் மேன், இங்கு மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது என பதில் கூறுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. அதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
