கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.

டெல்லி: கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோமணி முதலில் பதில் சொல்ல வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. மொத்தம் 69 இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு நடந்தது.

சோதனையில் 2.16 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டது. சோதனை நிறைவு பெற்ற பின்னர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியபோது, இது அதிமுகவை பழிவாங்க வேண்டும், அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட ரெய்டு என்றார். என் வீட்டில் இருந்து எனது ஒரு செல்போனை தவிர அதிகாரிகள் வேறு எதையும் எடுத்து செல்லவில்லை.

இந்த சோதனையின் பின்னணியில் இருப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. என்னை பழிவாங்க திமுகவிடம் சொல்லி ரெய்டு நடத்த வைத்துள்ளார். ரெய்டுக்கு காரணம் செந்தில் பாலாஜி தான். அவரது சுயரூபம் திமுகவுக்கு தெரியவில்லை.

கிரிப்டோகரன்சியில் நான் முதலீடு செய்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்று எனக்கு தெரியாது. ரெய்டு என்னை பழிவாங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பொரிந்து தள்ளினார் தங்கமணி.

எப்போதும் தம் மீதான விமர்சனம் அல்லது குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதில் அளிப்பது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கம். மின்வெட்டு, அணிலால் மின்வெட்டு, 4 சதவீதம் கமிஷன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில், செய்தியாளர்கள் பேட்டியிலும் கூறிய போது நேரடியாக பதில் அளித்தார் செந்தில் பாலாஜி.

இப்போது அப்படித்தான்…. முன்னாள் அமைச்சர் தங்கமணி ரெய்டு விவகாரத்தில் தம்மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்துள்ளார். மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை இன்று நேரில் சந்தித்த அவர், நிலக்கரி ஒதுக்கீடு, மின்திருத்த சட்டம் உள்ளிட்ட 12 கோரிக்கைகள் கொண்ட மனுவை அவரிடம் அளித்துள்ளார்.

இதன் விவரங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். அதனை தொடர்ந்து தங்கமணியின் விமர்சனத்துக்கும் பதிலடி தந்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: ஒரே கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு கருத்தை சொல்ல, தங்கமணி தனியாக ஒரு கருத்தை சொல்கிறார். எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

ஊழல் கறைபடிந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியையே மாண்புமிகு தளபதி அவர்களின் அரசு நிறைவேற்றி வருகிறது.

கிரிப்டோ கரன்சிகளில் ஊழல் பணத்தை முதலீடு செய்த அரசியல்வாதி என இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு பதில் அளித்தால் பரவாயில்லை.

கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும், கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோமணி முதலில் பதில் சொல்ல வேண்டும் என்று போட்டு தாக்கி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.