minister sellur raju opinion about jayalalitha daughter
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுகவில் கடுமையான குழப்பங்கள் நிலவிவருகிறது. அதிமுகவில் மட்டுமல்லாமல், அவரது வாரிசு யார் என்பது தொடர்பான சர்ச்சையும் நிலவிவருகிறது.
அண்மையில், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் ஜெயலலிதாவின் மகள் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது.
ஆனால், அதன்பிறகும் அந்த சர்ச்சை தீரவில்லை. ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா,ஜெயலலிதாவிற்கு மகள் இருப்பது உண்மைதான். ஆனால், அது அம்ருதா தானா என்பது தெரியாது என கூறியிருந்தார்.
அதன்பிறகு, ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவனும், ஜெயலலிதாவிற்கு மகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
தனக்கு குடும்பம் இல்லை. தமிழக மக்களே தனது குடும்பம் என கூறிவந்த ஜெயலலிதாவிற்கு மகள் இருப்பதாக வெளியாகும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதாவின் மகள் என கூறும் அம்ருதா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அம்ருதா என்பவர் அவதூறு பரப்பி வருகிறார். விளம்பரத்துக்காகவும், சிலரின் அரசியல் தூண்டுதலாலும் தன்னை எங்கள் அம்மாவின் மகள் என்று சொல்லி வருகிறார். ஜெயலலிதாவுக்கு ஒன்றரைக் கோடி தொண்டர்கள்தான் வாரிசு. வேறு யாரும் வாரிசு அல்ல என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
