அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறி விமர்சித்து கொள்வது வழக்கம். அதிலும் திமுக குறித்தும் அதன் தலைமை குறித்தும் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக அமைச்சர்கள் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் குற்றம் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை போரூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் 70வது கிளை இன்று திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் பெஞ்சமின் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

2 கோடியே 35 லட்சம் செலவில் 279 பயனாளிகளுக்கு கடனுதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் பெஞ்சமின் அரசின் சாதனைகள் குறித்தும் மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் குறித்தும் பேசினார்.

பின்னர் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும் என்று தெரிவித்தார்.

மேலும் தேசிய வங்கிகளில் மட்டுமே கொள்ளை நடந்திருப்பதாகவும் கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை முயற்சி மட்டுமே நடந்ததாக குறிப்பிட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து விமர்சித்த அவர், ஸ்டாலின் முதல்வராக கனவு மட்டுமே காண முடியும் என்று தெரிவித்தார். அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ச்சியாக திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.