காமாலை பிடித்தவருக்கு கண்டெதெல்லாம் மஞ்சள்.. எல்லாத்திற்கும் அரசியல் சாயம் பூசும் அண்ணாமலை- சீறும் சேகர்பாபு
காமாலை பிடித்தவருக்கு கண்டெதெல்லாம் மஞ்சள் என்பதை போல, எங்கு எந்த விதமான சந்தர்ப்ப சூழல் காரணமாக நடக்கும் சம்பவங்களையும் அரசியல் சாயம் பூசுவது வாடிக்கையாக அண்ணாமலை கொண்டுள்ளதாக சேகர்பாபு விமர்சித்தார்.
ஶ்ரீரங்கம் கோயிலில் பக்தர் மீது தாக்குதல்
திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் வெளிமாநில அய்யப்ப பக்தர்களுக்கும், அறநிலையத்துறை ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக இந்துசமய அறநிலையத்துறைக்கு எதிராக திருச்சி மாவட்டப் பிரிவினர் இன்று கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் கோயில் வளாகத்திற்குள் இரத்தக்களரி ஏற்பட்டது. இந்துசமய அறநிலையத் துறையின் திமிரும் இந்த சம்பவத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியிருந்தார்.
சமூக தீர்வு எட்டப்பட்டது
இந்தநிலையில் இதற்கு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை சேத்துபட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திர மாநில பக்தர் தாக்கப்பட்ட சம்பவம் ,பக்தருக்கும் பணியாளருக்கும் இடையே நடைப்பெற்ற மோதல் எனவும், நேற்றே பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்டப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
எல்லாத்திற்கும் அரசியல் சாயம்
காமாலை பிடித்தவருக்கு கண்டெதெல்லாம் மஞ்சள் என்பதை போல, எங்கு எந்த விதமான சந்தர்ப்ப சூழல் காரணமாக நடக்கும் சம்பவங்களையும் அரசியல் சாயம் பூசுவது வாடிக்கை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், மழை பாதிப்பை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தார் அது நடக்கவில்லை என்பதால் தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாக சேகர்பாபு விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்