இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 52 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை  1,937 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதை நிவர்த்தி செய்ய அரசு சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தன்னார்வலர்களும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் அதிமுகவின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மக்களுக்கு உதவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை துரிதப்படுத்தியிருக்கிறார்.

ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட இருக்கும் இந்நேரத்தில் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழியில்லாமல் இருக்கும் கோவை மாவட்ட ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு நிவாரண பொருட்கள் சென்று சேருவதில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறியதோடு அனைத்து தொகுதிகளுக்கும் நிவாரணப் பொருட்களை அமைச்சர் அனுப்பி வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, உப்பு என வீட்டிற்க்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டு வருகிறது.

தனது தொகுதியான தொண்டாமுத்தூரில் முகாமிட்டிருக்கும் அமைச்சர் வேலுமணி கடந்த சில வாரங்களாக மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் நேரிடையாக ஈடுபட்டுள்ளார். தொகுதியின் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்பதுடன் அவற்றை நிவர்த்தி செய்ய உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகளையும் இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சரின் துரித நடவடிக்கை தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.