மு.க. ஸ்டாலின் பாட்டெழுதி பேர் வாங்குவதாகத் தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறையைக் கண்டுபிடித்து அதன் மூலம் பெயர் வாங்கலாம் என்று நினைக்கிறார் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசின் சாதனை விளக்கப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 
 “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2016ல் அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்கள் எல்லாம் பெறப்பட்டன. ஆனால், அதன் பிறகு தேர்தல் யாரால் தடைபட்டது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். கட்சி தலைவர்களுக்கும் அது தெரியும். தற்போது முதல்வர், துணை முதல்வர் அறிவிப்புக்கு இணங்க தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்களை வாங்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு இதில் என்ன சந்தேகம் என்று எங்களுக்குத் தெரியவில்லை.  ‘திருவிளையாடல்’ படத்தில் வருவதுபோல பாட்டெழுதி பேர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். பாட்டிலே குறை கண்டுபிடித்து பேர் வாங்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். மு.க. ஸ்டாலின் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
அனேகமாக ஸ்டாலின் பாட்டெழுதி பேர் வாங்குவதாகத் தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறையைக் கண்டுபிடித்து அதன் மூலம் பெயர் வாங்கலாம் என்று நினைக்கிறார். ஆனால், இப்போது அவருடைய பாட்டு எடுபடவில்லை. ஸ்டாலின் ஒரு மூத்த அரசியல்வாதி. அனுபவம் தெரிந்தவர். எதையாவது பேச வேண்டும் என்று பேசுவது நியாயமாக இருக்காது. தற்போது எழுதி வைக்கப்பட்ட நாடகம் திமுகவில் அரங்கேறிவருகிறது. திமுகவில் வாரிசு அரசியல். அதிமுகவில் ஜனநாயக அரசியல். அங்கே நடப்பதெல்லாம் மன்னராட்சி. இங்கே நடப்பதெல்லாம் ஜனநாயக ஆட்சி.


திமுகவில் வாரிசு அரசியல், சர்வாதிகாரம், மன்னராட்சி என்று மகுடம் சூட்டிக்கொள்கிறார்கள். அதிமுகவில் மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது.  அதிமுக தலைவர்கள் மக்களால் மகுடம் சூட்டப்பட்டவர்கள்” என்று ஆர்.பி. உதய்குமார் தெரிவித்தார்.