கமலின் நாக்கை அறுப்பேன் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.  

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவரது நாக்கை அறுக்க வேண்டும். மேலும் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிக்கொண்டு பேசுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார். 

இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம், சென்னை மத்திய வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ப்ரியதர்ஷினி புகார் அளித்தார். இந்நிலையில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மோகன் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அவரது கொழுப்பெடுத்த நாக்கை அறுப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். சட்டத்தை மதிக்க வேண்டிய அமைச்சரே வன்முறையை தூண்டும் வகையில் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். இது இந்திய தண்டனை சட்டம் 503, 504-ன் படி அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.