இந்தியாவை ஆளும் பா.ஜ.க.வை ‘இந்துத்வ கட்சி’ என்றுதான் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அழைக்கின்றன. பா.ஜ.க.வால அல்லாத ஒரு சில மாநிலங்களின் அரசுகள்  இந்த விமர்சனங்களையும் தாண்டி அக்கட்சியை ஆதரிக்கின்றன. அவைகளில் ஒன்றுதான் தமிழகம். 

மத்திய அரசின் 99% திட்டங்களை, கருத்துக்களை, முடிவுகளை ஆதரிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அது மக்கள் நல திட்டங்களில் மட்டுமில்லை, அரசியல் சித்தாந்தங்களிலும் அப்படித்தான். என்னதான் திராவிட பாரம்பரியத்தில் வந்திருந்தாலும் கூட, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., பூஜை! புணஸ்காரங்கள்! யாகஙக்ள் என்றுதான் வளர்ந்தது. அந்த இந்து மத பற்று இன்னமும் தொடர்கிறது அக்கட்சியில். அதை அரசியலோடும் இணைத்து, வெளிப்படையாகவே போட்டுத் தாக்குவதில் அக்கட்சியின் அமைச்சர்கள் திறமையானவர்கள். 

அப்படித்தான் ஸ்டாலினை வெளுத்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சமீபத்தில் இப்படி பேசியிருக்கும் அமைச்சர் “டில்லியில் மாணவர்களுக்குள் நடந்த சண்டை விவகாரத்தில், விமானம் ஏறிச்சென்று தி.மு.க. தலைவர்கள் ஆறுதல் கூறுகின்றனர். (ஜாமியா பல்கலையில் ஒரு முகமூடி கும்பலால் தாக்கப்பட்ட மாணவர்களை, தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறியதை சொல்கிறார்) ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற இந்துக்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிக்க, அக்கட்சி தலைவர்கள் முன்வரவில்லை. (சமீபத்தில் திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி விஜய ரகு படுகொலையான விவகாரம் உள்ளிட்டவை....). அப்படியானால் தி.மு.க.வுக்கு இந்துக்களின் ஓட்டுக்கள் மட்டும் இனிக்கிறது. 

ஆனால் அவர்களின் உயிர் கசக்கிறது. அந்த அலட்சியம் இருப்பதால்தானே ஆறுதல் சொல்ல வரவில்லை! இதுதானே உங்களோச பாலிடிக்ஸ் ஸ்டாலின்!” என்று வெளுத்திருக்கிறார் வெளிப்படையாக. இது பற்றி பேசும் அரசியல் விமர்சகர்கள் ”முத்தலாக், சிஏஏ உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக போராடியதன் மூலம் தி.மு.க.வுக்கு சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி மிக முழுமையாக கிடைக்கிறது.  இதை அப்படியே எதிர்வரும் சட்டசபை தேர்தல் வரை தக்க வைக்க முயல்கிறார் ஸ்டாலின். அதேபோல் இந்துக்களின் வாக்கு வங்கியில் குறிப்பிட்ட சதவீதமும் தி.மு.க.வுக்கு செல்கிறது. 

இதையும் பெருமையாகவே குறிப்பிடுகிறார் ஸ்டாலின். சிறுபான்மையினர் வாக்குவங்கி கால் வாருவதால் அ.தி.மு.க.வுக்கு பெரியளவில் அடி விழுகிறது. இந்த விஷயத்தை மனதில் வைத்து, தி.மு.க.வுக்கு இந்துக்களின் வாக்கு வங்கியில் ஒரு சதவீதம் கூட செல்லாமல் தடுத்திடத்தான் ராஜேந்திர பாலாஜி இப்படியெல்லாம் வெளிப்படையாக போட்டுத் தாக்குகிறார். இதன் மூலம் தி.மு.க.வின் தேர்தல் வெற்றியை தடுத்திட முயல்கிறார் அமைச்சர்.” என்கிறார்கள். ஆனால் ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மிக வன்மையாக கண்டித்துள்ளார் ஸ்டாலின். அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! வாயில் வன்மம் வைத்து, நாட்டை வன்முறை பாதைக்கு திருப்பிட திட்டமிட்டுள்ளார்! அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! என்று கவர்னருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதையும் கூட ‘இந்துக்கள் வாக்கு வங்கியை தங்களுக்கு எதிராக அமைச்சர் திருப்புவதால் தி.மு.க.வுக்கு பயம் ஏற்பட்டுள்ளதன் விளைவே!’ என்கின்றனர் விமர்சகர்கள். கவனிப்போம்!