முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார். அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா கூறியது தொடர்பாக விருதுநகரில்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி;- 2ஜியில் ஊழல் செய்த பணத்தைப் ஆ.ராசா பதுக்கி வைத்துள்ளார். அதனால்தான் ராசாவை கூடவே வைத்துள்ளார் ஸ்டாலின். ஆ.ராசா விவாதத்துக்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வர வேண்டும்? நான் வருகிறேன். திமுக தயாரா? என்று கேள்வி எழுப்பினார். பொறாமையுடன் எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என கனவு காணும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்றார். எடப்பாடியைப் பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன யோக்கியதை உள்ளது? ஜெயலலிதாவையோ, எடப்பாடியையோ பற்றி பேச ஸ்டாலினுக்கோ, ஆ.ராசவுக்கோ தகுதியில்லை என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு திமுக தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.  திமுகவினரின் போராட்டத்தை அதிமுகவினர் தடுக்கின்றனர். முதல்வர் எடப்பாடி  பழனிசாமி எனக்கு அறிக்கை நாயகன் என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார். அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில், எதிர்க்கட்சிகள் அரசியல் தான் செய்யும். ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சிகளின் வேலை. அந்த வேலையைத் தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

எனக்கு  அறிக்கை நாயகன் பட்டம் என்றால் நான் ஊழல் நாயகன் என்ற பட்டத்தை முதல்வருக்குக் கொடுக்கிறேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். அவரது கொள்கைகளை அறிவிக்கட்டும். அதன் பிறகு நான் கருத்து கூறுகிறேன். திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என ரஜினி சொன்னதாக எனக்கு தகவல் வரவில்லை. தமிழருவி மணியனை ஏன் அருகில் வைத்துக்கொண்டோம் என ரஜினி சொன்னதாகத்தான் எனக்கு தகவல் வந்துள்ளது என்றார்.

குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பியது போது;- அவர் ஒரு பஃபூன் என்று விமர்சனம் செய்தார். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. எங்கள் மீதான குற்றங்கள் நிருப்பிக்கப்படவில்லை. தண்டனையோ வழங்கப்படவில்லை என்றார்.