’பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் மழையை பொழிய வைக்க முடியாது. பருவகாலங்களில்தான் மழை பெய்யும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்திருந்த நிலையில்  மழைவேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யாகம் நடத்தப்போவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ இன்னொரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் களப்பணியாளர்களுக்கான குடிநீர் பிரச்னை தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆர்.ஆர்.நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,’ தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய சிறந்த திட்டங்கள் அரசிடம் உள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைபடுத்த வேண்டிய ஊராட்சி செயலாளர்கள் மெத்தனமாக செயல்படுவதே பிரச்னைக்கு காரணம். பொறுப்பு அறிந்து ஊராட்சி செயலாளர்கள் செயல்பட வேண்டும்.தண்ணீர் பிரச்னை காரணமாக தனியார் பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்பது தவறு. மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தருவதாக கூறித்தான் தனியார் பள்ளிகள் அனுமதி பெற்றுள்ளன. தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி பள்ளியை மூடப்போவதாக தனியார் பள்ளிகள் அரசை மிரட்டக் கூடாது.

மழையை பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் பொழிய வைக்க முடியாது. அது  பருவகாலங்களில் தான் பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொஞ்சம் தள்ளி போயிருக்கிறது. ஜூன் 30க்கு பிறகு மழை பெய்யும் எனக் கூறினார்.

ராஜேந்திரபாலாஜியின் கருத்தைத் தொடர்ந்து மழைப்பிரச்சினை குறித்துப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,’தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை  இல்லை. சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்  உயர்த்தப்பட்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. மதுரை மாவட்டத்தின் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால்  குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’என்றார்.