போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து அமைச்சரின்  இலாகா மாற்றம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உட்கட்சி மோதல் காரணமாகத்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் தெரிவித்துள்ளனர். 

திமுக உட்கட்சி மோதல் ?

திமுக அரசு பதவியேற்றுள்ள 11 மாதங்களில் இதுவரை எந்த ஒரு அமைச்சரும் மாற்றப்படாத நிலையில் தற்போது முதல் முறையாக அமைச்சர் ஒருவர், பதவி மாற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை வெளியிட்டு வந்த நிலையில் அமைச்சரின் இலாகா மாற்றம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக உட்கட்சி மோதல் காரணமாகத்தான் இந்த பிரச்சனை பெரிய அளவில் வெளியே தெரிந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்ட மன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரான காதர்பாட்சா(எ) முத்து ராமலிங்கத்திற்கு திமுக தலைமை தேர்தலின்போது முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட் ஒதுக்க எண்ணியபோது அந்த தொகுதியில் போட்டியிடாமல் காதர்பாட்சா முத்து ராமலிங்கம், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என்ற நிலையில் தான் எப்படியும் அமைச்சர் ஆகிவிடுவோம் என்ற கனவில் இருந்த காதர்பாட்சா(எ) முத்து ராமலிங்கத்திற்கு போட்டியாக ராஜ கண்ணப்பனுக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ராஜ.கண்ணப்பன்

இந்தநிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜக கண்ணப்பன் அமைச்சரான நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா(எ)முத்துராமலிங்கத்திற்கும் ,அமைச்சர் ராஜ கண்ணப்பன் இடையே மறைமுகமாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பனை சந்தித்த போது வட்டார வளர்ச்சி அதிகாரியான ராஜேந்திரன் சரியாக ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் அதிமுகவினருக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் புகார் கூறி இருந்தனர். இதனையடுத்து தன்னை வந்து சந்திக்குமாறு வட்டார வளர்ச்சி அதிகாரியான ராஜேந்திரனிடம் தெரிவிக்குமாறு அமைச்சர் ராஜ.கண்ணப்பன் கூறியிருந்துள்ளார். இந்த நிலையில், பல்வேறு திமுக நிர்வாகிகள் அமைச்சர் ராஜ.கண்ண்ப்பனை வீட்டில் சந்தித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரியான ராஜேந்திரனும் அமைச்சரை சந்திக்க வந்துள்ளார். அப்போது திமுக ஒன்றிய உறுப்பினர்கள் கூறும் புகார் தொடர்பாக அமைச்சர் கேள்வி எழுப்பியதாகவும், அதிமுக சேர்மனாக இருக்க கூடியவர் சொன்னால் தான் பணி செய்வீர்களா என்று அமைச்சர் ராஜ. கண்ணப்பன் கேள்வி கேட்டதாகவும் சம்பம் நடைபெற்ற இடத்தில் இருந்த வேல்ராமன் தெரிவித்துள்ளார். இனியும் சரியான முறையில் பணி செய்யவில்லையென்றால் பணியிடமாற்றம் செய்துவிடுவேன் என அமைச்சர் ராஜ.கண்ணப்பன் வட்டார வளர்ச்சி அதிகாரியான ராஜேந்திரனை எச்சரித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அமைச்சர் ராஜ.கண்ணப்பன், வட்டார வளர்ச்சி அதிகாரியான ராஜேந்திரனை ஜாதி பெயரை சொல்லி திட்டவில்லையென்றும் வேல்ராமன் தெரிவித்துள்ளார். 

தூண்டிவிட்ட திமுகவினர் ?

 அமைச்சர் ராஜ.கண்ணப்பன் , வட்டார வளர்ச்சி அதிகாரியான ராஜேந்திரனை திட்டிய சம்பவம் திமுக நிர்வாகிகள் மத்தியில் பரவிய நிலையில் இதனை கேள்வி பட்ட ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்கள், ராஜேந்திரனை பத்திரிக்கைகளில் பேட்டி கொடுக்குமாறு தூண்டிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உட்கட்சி மோதல் காரணமாகவே இந்த பிரச்சனை பூதாகரமாக மாறியதாகவும் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கும், அமைச்சர் ராஜ.கண்ணப்பனுக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லையென்று ராமநாதபுரம் மாவட்ட திமுகவின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.