ஜெயலலிதா இல்லாத குறையே தெரியாமல், அவர் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்துவருகிறார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டில் கூவத்தூர் களேபரத்துக்குப் பிறகு, பிப்ரவரி 16 அன்று தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவருடைய ஆட்சி இதோ கவிழ்ந்துவிடும், அதோ கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பலமுறை நாள் குறித்தன. ஆனால், அவற்றையெல்லாம் பொய்யாக்கி, 3 ஆண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு தமிழக அமைச்சர்கள், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஜெயலலிதா இல்லாத குறையே தெரியாமல் எடப்பாடி பழனிச்சமி ஆட்சி செய்துவருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி. உதய்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். “மூன்று நிமிடங்கள் இந்த ஆட்சி நீடிக்குமா என்று கேட்டவர்களுக்கு தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளார்.
ஜெயலலிதா இல்லாத குறையே எங்களுக்கு தெரியாமல், அவர் வழியில் ஆட்சி செய்துவருகிறார். இந்நேரம் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு பாராட்டி இருப்பார்” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.