நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல, நிச்சயமாக நாங்களும் விடமாட்டோம் என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் பற்றி நடிகர் ரஜினி ஒரு வாரம் கழித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.


அதில், “தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. சத்தியமா விடவே கூடாது” என்று ரஜினி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினியின் கருத்து பற்றி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போல, நிச்சயமாக நாங்களும் விடமாட்டோம்; என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை தமிழக அரசு முழுமையாக எடுத்து வருகிறது. நீதிமன்றம் சொல்வதைப் போல அரசு நடந்து வருகிறது. குற்றவாளியாக இருந்தாலும் சட்டப்படித்தான் தண்டிக்கப்பட வேண்டும். ரஜினிகாந்த் சொன்ன கருத்து எங்களுக்கும் உடன்பாடுதான்.” என்று தெரிவித்தார்.