செந்தில் பாலாஜி தூக்கில் தொங்கினால் நான் உடனே எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய விஜயபாஸ்கர் "செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்வேன். இல்லை என்றால் என் பதவியை ராஜினாமா செய்வேன்" என்று சவால் விடுத்திருந்தார். இறுதியில் 37,824 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜியே அரவக்குறிச்சி தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும் செய்தியாளர்களை சந்தித்த அவர் கேட்ட முதல் கேள்வியே "நான் வெற்றி பெற்றால் ராஜினாமா செய்வதாக கூறிய விஜயபாஸ்கர் எப்போது ராஜினாமா செய்வார்" என்று கேட்டு சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மீண்டும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியால் கோபமானவர், "செந்தில் பாலாஜி எதற்கெடுத்தாலும், செய்தியாளர்களை கேட்டு சொல்லச் சொல்கிறார். நான் எப்போது பதவி விலகுகிறேன் என்றும் கேட்கச் சொல்லியுள்ளார்.

அமமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு செந்தில் பாலாஜி வெற்றிபெற்றால் அரசியலிலிருந்து விலகத் தயார் என்று கூறியது உண்மைதான். செந்தில் பாலாஜி கூடத்தான் தினகரனை முதல்வராக்கவில்லை என்றால் தூக்கில் தொங்குவேன் என்று சொல்லி இருக்கிறார். அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் எப்போது தூக்குப்போட்டுக் கொள்கிறார் என்று. அப்போது நானும் பதவி விலகுகிறேன்" என்று ஆவேசமாக பதில் அளித்து விட்டு சென்றார்.