தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் நகர்ப்பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் செடிகளை நட்டு வளர்த்துவருகிறார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செயல், கரூர் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலையும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக கையாண்டுவருகிறது. அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வது, கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், சிகிச்சையளித்தல் என கொரோனா தடுப்பு பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டுவருகிறது தமிழக அரசு. 

முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களும் கொரோனா பீதிக்கு மத்தியிலும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றிவருகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பீதியிலும் ஆட்சியாளர்கள் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றிவருவது, மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீதான நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்படுகிறது. 

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக அரசு சிறப்பாகவே செயல்பட்டாலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தலை மனதில்வைத்து, தொடர்ச்சியாக அதிமுக அரசு மீது குற்றம்சாட்டியும் விமர்சித்தும் வருகின்றன. ஆனால் அதிமுக அமைச்சர்கள் தங்கள் மீதான அபிப்ராயத்தை மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வைக்கும் வகையில், சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். 

அந்தவகையில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் கரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செயல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கரூர் நகர்ப்பகுதிகளில் சுற்றுச்சூழலை நகர் முழுவதும் ஏராளமான செடிகளை நட்டுள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தான் நட்ட செடிகளுக்கு தானே தண்ணீர் ஊற்றி வளர்த்துவருகிறார். 

உலக வெப்பமயமாதல், ஒட்டுமொத்த பூமியின் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே மரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் உலகத்திற்கே உள்ளது. அந்தவகையில், கரூர் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழலை காக்கும் விதத்திலும் கரூர் நகர் முழுவதும் ஒன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு அதற்கு 15 டிராக்டர்கள் மூலம் தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது. அதிலும் பெரும்பாலான செடிகளுக்கு நேரடியாக தானே தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ராஜமுந்திரியிலிருந்து நாட்டு மரக்கன்றுகள் வாங்கிவரப்பட்டு, கரூர் முழுவதும் மரம் வளர்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வேலூர், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருக்கும். அந்தவகையில், , இந்த காலக்கட்டத்தில் செய்தே தீரவேண்டிய அத்தியாவசிய பணியும், அதுவும் குறிப்பாக கரூருக்கு அவசியமான பணியுமான மரம் வளர்த்தலில் தானே நேரடியாக ஈடுபட்டுள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செயல் சொந்த தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

கரூர் மக்களின் நலனையும் சுற்றுச்சூழலையும் கருத்தில்கொண்டு அமைச்சர் செய்யும் இந்த செயலை சிலர் அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்கக்கூட செய்யலாம். ஆனால், எது எப்படியோ அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்னெடுப்பால், கரூர் நகர் மரங்கள் நிறைந்த பகுதியாக சுற்றுச்சூழலில் மேம்பட்டு வருவது நல்லது.